/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர், தேர்வாணையர் பதவிக்கு 'எங்களுக்கும் தகுதி இருக்கு'; பேராசிரியர்கள் - நிர்வாக அலுவலருக்கு இடையே நீயா.. நானா.. மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர், தேர்வாணையர் பதவிக்கு 'எங்களுக்கும் தகுதி இருக்கு'; பேராசிரியர்கள் - நிர்வாக அலுவலருக்கு இடையே நீயா.. நானா..
மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர், தேர்வாணையர் பதவிக்கு 'எங்களுக்கும் தகுதி இருக்கு'; பேராசிரியர்கள் - நிர்வாக அலுவலருக்கு இடையே நீயா.. நானா..
மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர், தேர்வாணையர் பதவிக்கு 'எங்களுக்கும் தகுதி இருக்கு'; பேராசிரியர்கள் - நிர்வாக அலுவலருக்கு இடையே நீயா.. நானா..
மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர், தேர்வாணையர் பதவிக்கு 'எங்களுக்கும் தகுதி இருக்கு'; பேராசிரியர்கள் - நிர்வாக அலுவலருக்கு இடையே நீயா.. நானா..
ADDED : ஜூன் 30, 2025 03:40 AM

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் பதிவாளர், தேர்வாணையர் பணியிடங்களில் மூத்த பேராசிரியர்களுக்கு தான் 'கூடுதல் பொறுப்பு' வழங்க வேண்டும் என பேராசிரியர்கள் சங்கம் (மூபா) வலியுறுத்திய நிலையில், யு.ஜி.சி., விதிப்படி எங்களுக்கும் பதவி வகிக்க வழியிருக்கு என நிர்வாக அலுவலர்கள் சங்கம் போர்க்கொடி துாக்கியுள்ளது. இதனால் பேராசிரியர் - அலுவலர்களுக்கு இடையே நீயா நானா போட்டி ஏற்பட்டுள்ளது.
இப்பல்கலையில் துணைவேந்தர் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளது. பதிவாளர், டீன், தொலைநிலை கல்வி இயக்குநர், கூடுதல் இயக்குநர் என உச்ச பதவிகளில் பேராசிரியர்களுக்கு 'கூடுதல் பொறுப்பு' வழங்கப்பட்டுள்ளது.
தேர்வாணையர் பதவி மட்டும் மூத்த துணைப் பதிவாளர் முத்தையாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
தற்போது பல்கலையில் நிதித்தட்டுப்பாடு, ஆடிட் அப்ஜெக் ஷன்கள், பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு (சி.எஸ்.ஏ.,) வழங்க முடியாதது உள்ளிட்ட பல்வேறு குழப்பங்கள் தொடர்கின்றன. பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு சம்பளப் பிரச்னை நீடிக்கிறது. ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் கிடைக்காததால் ஓய்வூதியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்கலை பிரச்னைகளை உரிய முறையில் அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதில்லை என தற்போதைய பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் மீது புகார் எழுந்துள்ளது. இதனால் அவரை மாற்றி மூத்த பேராசிரியரை நியமிக்க வேண்டும். அதேபோல் தேர்வாணையர் பதவிக்கும் மூத்த பேராசிரியரை நியமிக்க வேண்டும் என உயர்கல்வித்துறைக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியுற்ற பல்கலை நிர்வாக அலுவலர் சங்கம், 'தேர்வாணையர், பதிவாளர் பதவிகளில் ஆசிரியர் அல்லாத துணைப் பதிவாளர்களாக இருந்தவர்கள் பொறுப்பு வகித்துள்ளனர். இதற்கான விதிமுறை யு.ஜி.சி.,யில் உள்ளது' என போர்க்கொடி துாக்கியுள்ளது.
அச்சங்க தலைவர் முருகன் கூறியதாவது: குறைந்தது 8 ஆண்டுகள் துணைப் பதிவாளராக பணியாற்றியவர் தேர்வாணையர், பதிவாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற விதி உள்ளது. தற்போது இப்பல்கலை புதிய பதிவாளர், தேர்வாணையர் உள்ளிட்ட பதவிகளுக்கான அறிவிப்பிலும் பல்கலை அலுவலர்களுக்கான கல்வித் தகுதி, அனுபவம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 6 அலுவலர்கள் இப்பல்கலையில் பதிவாளர், தேர்வாணையர் பதவிகளை வகித்துள்ளனர். இதுகுறித்து நாங்களும் உயர்கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார்.
பல்கலையில் பேராசிரியர்- அலுவலர்களுக்கு இடையே இதுபோன்ற போட்டி ஏற்பட்டுள்ளதால் 'பதிவாளரை மாற்ற வேண்டும்' என்ற பேராசிரியர்களின் கோரிக்கை பிசுபிசுக்க வாய்ப்புள்ளது.