ADDED : பிப் 06, 2024 07:35 AM

மதுரை,: மதுரை காமராஜ் பல்கலையில் இரண்டு மாதங்களாக பென்ஷன், குடும்ப பென்ஷன் வழங்காததை கண்டித்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இப்பல்கலையில் ஏற்பட்டுள்ள கடும் நிதி தட்டுப்பாடு, நிலுவை தணிக்கை ஆட்சேபனைகள் காரணமாக பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு 2023 டிச., முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் 1202 ஓய்வூதியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பாதித்துள்ளனர்.
இதை கண்டித்து பல்கலை பதிவாளர் அலுவலகம் முன் சங்கத் தலைவர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் சுவாமிநாதன், இணை செயலாளர் கிரிதரன், பொருளாளர் பாலகுருசாமி முன்னிலை வகித்தனர். முன்னாள் துணைவேந்தர் திருமலை, சங்க முன்னாள் இணைச் செயலாளர் ராஜேந்திரன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அவர்கள் கூறுகையில், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் இரண்டு மாதங்களாக கிடைக்காததால் அனைவரும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். இப்பிரச்னையை பல்கலை நிர்வாகம் அரசிடம் உரிய முறையில் எடுத்துச் செல்ல வேண்டும். பல்கலை சம்பள பிரச்னைக்கு தமிழக அரசு உடன் தீர்வுகாண வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றனர்.