/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை மேற்கு தொகுதி வார்டுகளில் திட்டங்களை வாரி இறைக்கிறாங்கப்பா மதுரை மேற்கு தொகுதி வார்டுகளில் திட்டங்களை வாரி இறைக்கிறாங்கப்பா
மதுரை மேற்கு தொகுதி வார்டுகளில் திட்டங்களை வாரி இறைக்கிறாங்கப்பா
மதுரை மேற்கு தொகுதி வார்டுகளில் திட்டங்களை வாரி இறைக்கிறாங்கப்பா
மதுரை மேற்கு தொகுதி வார்டுகளில் திட்டங்களை வாரி இறைக்கிறாங்கப்பா
ADDED : ஜூன் 13, 2025 02:50 AM

மதுரை: மதுரை மாநகராட்சியில் பிற தொகுதி மக்கள் ஆதங்கப்படும் வகையில் மேற்கு தொகுதி வார்டுகளில் ஆளும்கட்சியால் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 'ஜாக்பாட்' ஆக அதிக எண்ணிக்கையில் கவுன்சிலர்கள் உள்ள மேற்கு தொகுதிக்கு 'மண்டலத் தலைவர் பதவி' பிரதிநிதித்துவம் வழங்கவும் தி.மு.க., தலைமை 'கிரீன் சிக்னல்' கொடுத்துள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் மதுரை மேற்கு தொகுதி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இத்தொகுதி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ என்பதும், 20 ஆண்டுகளாக தி.மு.க., வெல்ல முடியாத தொகுதியாகவும் உள்ளது.
சில மாதங்களுக்கு முன் அமைச்சர் மூர்த்தியை இத்தொகுதி பொறுப்பாளராக கட்சித் தலைமை அறிவித்து, அவரது வடக்கு மாவட்ட தி.மு.க., எல்லைக்குள் கொண்டு சென்றது. இதையடுத்து ரூ.100 கோடிக்கும் மேல் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரே நாளில் 53 ரோடு பணிகளையும் நேரில் சென்று அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்து தொகுதியை தெறிக்க விட்டுள்ளார்.
மேலும் இத்தொகுதியில் கட்சியினரை குஷிப்படுத்தும் வகையில் இங்குள்ள தி.மு.க., வார்டு கவுன்சிலர்களில் ஒருவருக்கு மாநகராட்சி மண்டல தலைவர் பதவியும் வழங்க கட்சி முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இத்தொகுதியை தி.மு.க., வசம் கொண்டுவர அசுர பலத்துடன் ஆளுங்கட்சி நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
இதுகுறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது:
அமைச்சர் மூர்த்தி மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற தொகுதிக்கு தேவையான திட்டங்களை அதிகாரிகள் தாமதமின்றி செய்கின்றனர். குறைதீர் கூட்டங்களிலும் இத்தொகுதி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி மண்டல தலைவர் பதவியும் வழங்க ஆலோசிக்கப்படுகிறது.
தற்போது கிழக்கு, மத்தி, வடக்கு, தெற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தலா ஒரு மண்டல தலைவர் உள்ளனர். குறிப்பாக நகர் தி.மு.க.,வுக்கு உட்பட்டு மண்டலம் 2, மண்டலம் 3, மண்டலம் 4 என மூன்று தலைவர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொகுதிக்கு இல்லை. மேற்கு தொகுதியில் தான் அதிக எண்ணிக்கையாக 22 வார்டுகள் உள்ளன.
வடக்கில் 19, மத்தி 16, திருப்பரங்குன்றம் 15, தெற்கு, கிழக்கில் தலா 14 வார்டுகள் உள்ளன. இதனால் வார்டு எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நகர் தி.மு.க., எல்லைக்கு உட்பட்ட 3 மண்டலங்களில் ஏதாவது ஒன்றை எடுத்துவிட்டு, மேற்கு தொகுதிக்கு மண்டல தலைவர் பதவி வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூர்த்தி, தியாகராஜன் என இரண்டு அமைச்சர்களும் இணைந்து எடுத்த இந்த முடிவுக்கு தி.மு.க., தலைமையும் கிரீன் சிக்னல் தெரிவித்துள்ளது. விரைவில் மாற்றம் இருக்கும் என்றனர்.