/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சிறுநீரக கற்களை அகற்றும் ஆர்.ஐ.ஆர்.எஸ்., சிகிச்சை சிறுநீரக கற்களை அகற்றும் ஆர்.ஐ.ஆர்.எஸ்., சிகிச்சை
சிறுநீரக கற்களை அகற்றும் ஆர்.ஐ.ஆர்.எஸ்., சிகிச்சை
சிறுநீரக கற்களை அகற்றும் ஆர்.ஐ.ஆர்.எஸ்., சிகிச்சை
சிறுநீரக கற்களை அகற்றும் ஆர்.ஐ.ஆர்.எஸ்., சிகிச்சை
ADDED : மே 31, 2025 04:59 AM
மதுரை: ஆர்.ஐ.ஆர்.எஸ்., எனப்படும் குறைவான ஊடுருவல் சிகிச்சை முறையில் 62 வயது பெண் நோயாளிக்கு 2 செ.மீ. தடிமனுள்ள இரண்டு சிறுநீரகக் கற்கள் குணப்படுத்தப்பட்டதாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சிறுநீரகவியல்துறை முதுநிலை நிபுணர்கள் பால் வின்சென்ட், ரவிச்சந்திரன்,வேணுகோபால் கோணங்கி தெரிவித்தனர்.
டாக்டர்கள் கூறியதாவது:
இப்பெண் நோயாளிக்கு சமீபத்தில் 'ஸ்டென்ட்' பொருத்தப்பட்டு, ரத்தக்கட்டி ஏற்படுவதை தடுப்பதற்கான இரு வெவ்வேறு வகையான மருந்துகளை உட்கொண்டு வருகிறார். அவருக்கு 'ரெட்ரோகிரேட் இன்ட்ரா-ரீனல் சர்ஜரி' (ஆர்.ஐ.ஆர்.எஸ்.,) எனப்படும் குறைவான ஊடுருவல் சிகிச்சை மூலம் வலது, இடது சிறுநீரகத்தில் இருந்த இரண்டு பெரிய கற்கள் அகற்றப்பட்டன.
வழக்கமாக ஆர்.ஐ.ஆர்.எஸ். என்பது 2 செ.மீ., வரையிலான அளவுள்ள சிறுநீரகக் கற்களை அகற்றப் பயன்படுத்தப்படும் குறைவான ஊடுருவல் சிகிச்சை. பெரிய அளவிலான கற்களை நீக்க இம்முறை பயன்படுத்தப்பட்டது.
நோயாளியின் சிறுநீரகத்தை நோக்கி கேமரா, விளக்குடன் கூடிய 'யூரிட்டராச்கோப்' எனும் நுண்ணிய நெகிழ் தன்மையுடைய சிறுநீர்ப்பாதை, சிறுநீர்ப்பை வழியாக சிறுநீரகத்துக்கு செலுத்தப்பட்டது.
லேசர் மூலம் சிறுநீரகக்கல், சிறு துகள்களாக உடைக்கப்பட்டு சிறிய பை போன்ற அமைப்பின் வழி பின்னோக்கி இழுக்கப்பட்டு அகற்றப்பட்டது. உடலைக்கீறி சிகிச்சை செய்யப்படுவதில்லை என்பதால் ரத்தக்கசிவு, பிற தொந்தரவுகளுக்கான வாய்ப்பு குறைவு. சிகிச்சை முடிந்த மறுநாளே வேலைக்கு செல்லலாம்.
சிறுநீரில் உள்ள சில அம்சங்கள் அடர்த்தியாகி சிறு சில்லுகளாக மாறி நாளடைவில் சிறுநீரகக் கற்களாகி விடும். இதை தடுக்க தினமும் 2 லிட்டர் சிறுநீரை வெளியேற்ற வேண்டும். அதற்கு குறைந்தது 3 லிட்டர் நீர் பருக வேண்டும். அசைவ உணவுகளை குறைத்துக்கொள்ளவேண்டும் என்றனர்.