ADDED : மே 22, 2025 04:28 AM
தி.மு.க., பிரமுகர் மீண்டும் கைது
மதுரை: ஆனையூர் மலர் நகர் புகழ்இந்திரா 44. தி.மு.க., பிரமுகரான இவர், 2022ல் போலி ஆவணங்கள் மூலம் இடத்தை விற்று ரூ.பல லட்சம் மோசடி செய்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஜாமினில் வெளி வந்தவர், நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை பின்பற்றாததால் அவரது ஜாமினை ரத்துசெய்யக்கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் போலீசார் மனு செய்தனர். அதை ஏற்று ஜாமினை நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து மீண்டும் புகழ் இந்திரா கைது செய்யப்பட்டார்.
ஒருவர் கைது
மதுரை: தெற்குமாசி வீதி பகுதி அம்மன் கோயில் ஒன்றில் காமேசுவரன் 30, என்பவர் பூஜை செய்து வருகிறார். கோயிலுக்கு அடிக்கடி வந்த 35 வயது பெண்ணின் அலைபேசி எண்ணை பெற்று தகாத வார்த்தையில் பேசியதாக தெற்குவாசல் போலீசார் கைது செய்தனர்.
நகைமோசடி
மேலுார்: மதுரை பிரவீன்குமார் 28. மேலுாரில் நகை கடை நடத்துகிறார். கடைக்கு வந்த 2 பெண்கள் உட்பட 4 பேர், ஆறரை பவுன் பழைய நகையை கொடுத்து விட்டு அதற்கு பதில் 5 பவுன் புதிய நகை, ரூ.38 ஆயிரத்தை பெற்று சென்றனர். அவர்கள் சென்ற பின் பழைய நகையை சோதித்து பார்த்ததில் போலி நகை எனத்தெரிந்தது. இன்ஸ்பெக்டர் சிவசக்தி, போலீசார் தினேஷ் குமார் விசாரிக்கின்றனர்.
கார் மோதி பெண் பலி
மேலுார்: தாமரைப்பட்டி ராஜேஷ் 22. குடும்பத்தினருடன் மேலுார் ஜோதி நகரில் வசிக்கிறார். நேற்று மாலை தாமரைப்பட்டியில் உள்ள வயலுக்கு தனது அம்மா பஞ்சுவை 47, டூவீலரில் அழைத்து சென்றார். சத்தியபுரம் நான்கு வழிச்சாலையில் சென்ற போது பின்னால் மதுரையில் இருந்து சென்னை சென்ற கார் மோதியதில் பஞ்சு இறந்தார். ராஜேஷ் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்.