ADDED : ஜன 08, 2024 05:43 AM

வாலிபர் பலி
பேரையூர்: ஜாரிஉசிலம்பட்டியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் 35. சரவணன் 34. இருவரும் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) டி.கல்லுப்பட்டி அடுத்த காடனேரி அருகே வந்து கொண்டிருந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் மணிகண்டன் இறந்தார். சரவணன் காயம் இன்றி தப்பினார். போலீசார் விசாரிக்கின்றனர்.
ரேஷன் அரிசி கடத்திய ஐவர் கைது
மதுரை: வண்டியூர் பகுதியில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் எஸ்.ஐ., முத்துராஜா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த வேனில் ஆறுபேர் அரிசி மூடைகளை இறக்கினர். விசாரணையில் அது கடத்தல் ரேஷன் அரிசி என தெரியவந்தது. மேலும் அங்கிருந்த தகர செட்டில் நடத்திய சோதனையில் மொத்தம் 3 ஆயிரத்து 800 கிலோ அரிசி, வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக கல்மேடு மூர்த்தி 32, ஐராவதநல்லுார் ரகு 24, புட்டுத்தோப்பு கார்த்திக் ஈஸ்வரன், சக்கிமங்கலம் கபிலன் 19, குப்புசாமி 23, கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய அருண்பாண்டியை தேடி வருகின்றனர்.
வேன்கவிழ்ந்து 15 பேர் காயம்
கொட்டாம்பட்டி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த 15 பேர் பழநிக்கு பாதயாத்திரை சென்றனர். பழநியில் இருந்து வேனில் சொந்த ஊருக்கு திரும்பினர். வேனை அறந்தாங்கி முத்துசெல்வம் 38, ஓட்டினார். நேற்று முன்தினம் இரவு கொட்டாம்பட்டி, சொக்கலிங்கபுரம் பகுதியில் சென்ற போது வேன் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த பவானி 13, பரிமளா 29, பார்த்திபன் 11, சினேகா 26, உள்பட 15 பேர் காயமடைந்தனர். சிங்கம்புணரி, மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
இரும்பு குழாய்கள் திருட்டு
கொட்டாம்பட்டி: தேவகோட்டை அழகப்பன் 50, ஒப்பந்த அடிப்படையில் குழாய்கள் பதிக்கும் வேலை செய்து வருகிறார். இவர் டெக்கான் நிறுவனத்திடம் கொட்டாம்பட்டி பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்கள் பதிக்கும் வேலையை ஒப்பந்தம் எடுத்திருந்தார். நேற்று சொக்கம்பட்டி பகுதியில் பதிப்பதற்காக வைத்திருந்த 300 இரும்புக் குழாய்கள் திருடு போகவே விசாரித்தார். அவரது நிறுவன மேற்பார்வையாளர்கள் சிவா, ரஞ்சித், பணியாளர்கள் யோகேஷ்வரன், சங்கர்தாஸ். கிரேன் ஆப்ரேட்டர் சக்தி உள்ளிட்ட 6 பேர் குழாய்களை திருடியது தெரியவரவே புகார் கொடுத்தார். கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரிக்கிறார்.
நகை திருட்டு
பெருங்குடி: வலையங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று வீடு திரும்பினார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 2 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.2 ஆயிரம் பணத்தை யாரோ திருடிச் சென்றது தெரிந்தது. பெருங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.