ADDED : செப் 01, 2025 07:23 AM
மதுரை : திருச்சியில் இருந்து நேற்று காலை, 7:05 மணிக்கு, ராமேஸ்வரம் பயணியர் ரயில் புறப்பட்டது.
காரைக்குடி அருகே கோட்டையூர் ஸ்டேஷனுக்கு காலை, 8:20 மணிக்கு வந்து, 8:21 மணிக்கு புறப்பட வேண்டும். பிளாட்பாரத்தில் 60க்கும் மேற்பட்ட பயணியர் காத்திருந்தனர்.
டிரைவரின் கவனக்குறைவால் ஸ்டேஷனில் ரயில் நிற்காமல் சென்றது. பயணியர் கூச்சலிட்டதையடுத்து, அவசரமாக ரயில் நிறுத்தப்பட்டது. இதனால், கடைசியில் இருந்த மகளிர் பெட்டி மட்டும், பிளாட்பாரம் அருகே நின்றது.
ரயிலில் ஏற முடியாமல், பயணியர் சிரமத்திற்குள்ளாகினர். சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கட்டணத்தை திரும்ப பெற்றனர்.
சிலர் மட்டும் ஏறிய நிலையில், 4 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. ரயிலை தவறவிட்ட பயணியர் விடுமுறை தினத்தன்று சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.
துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ள கோட்ட மேலாளர் பிரகாஷ் மீனா உத்தரவிட்டார்.
தலைமை லோகோ இன்ஸ்பெக்டர், தலைமை வணிக இன்ஸ்பெக்டர், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.