/உள்ளூர் செய்திகள்/மதுரை/ முதல்போக சாகுபடிக்கு நெல் விதைகள் தயார் முதல்போக சாகுபடிக்கு நெல் விதைகள் தயார்
முதல்போக சாகுபடிக்கு நெல் விதைகள் தயார்
முதல்போக சாகுபடிக்கு நெல் விதைகள் தயார்
முதல்போக சாகுபடிக்கு நெல் விதைகள் தயார்
ADDED : மே 31, 2025 05:09 AM
மதுரை: கள்ளந்திரி முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க உள்ள நிலையில் மதுரை வேளாண் துறையின் கீழ் 276 டன் சான்று பெற்ற நெல் விதைகள் இருப்பு உள்ளது.
தென்மேற்கு பருவமழை பெய்யும் போது திண்டுக்கல் பேரணை முதல் மதுரை கள்ளந்திரி வரையான இருபோக சாகுபடிக்கான முதல்போக நெல் சாகுபடிக்கு ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் 5 க்குள் தண்ணீர் திறக்கப்படும். 5 நாட்களுக்கு முன் வரை முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 114.5 அடியாக இருந்ததால் சாகுபடிக்கான தண்ணீர் திறப்பு தாமதமாகும் என விவசாயிகள் கவலைப்பட்டனர். பருவமழை முன்கூட்டியே துவங்கிய நிலையில் நீர்மட்டம் 128 அடியாக உயர்ந்ததோடு நீர் இருப்பு 4000 மில்லியன் கனஅடியை எட்டியுள்ளது. இந்தளவு நீர்இருப்பு இருந்தால் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று அரசாணை உள்ளது. ஜூன் 6 ல் திறக்க ஏற்பாடு செய்யப்படுவதாக நீர்வளத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்று தயாரிக்கும் பணிக்காக வேளாண் துறை மூலம் அரசு வேளாண் விரிவாக்க மையங்கள், தனியார் விற்பனை நிலையங்களில் 276 டன் சான்று பெற்ற நெல் விதைகள் இருப்பு உள்ளதாக வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: 48.66 டன் சிறுதானிய விதைகள், 23 டன் பயறு வகைகள், 18.72 டன் எண்ணெய் வித்து விதைகள், 7 டன் பருத்தி விதைகள் மாவட்டத்தில் இருப்பில் உள்ளன. நெல் மற்றும் இதர பயிர்கள் சாகுபடிக்கு தேவையான யூரியா 3076 டன் உள்ளது. 683 டன் டி.ஏ.பி., 3139 டன் என்.பி.கே. கூட்டு உரம், 904 டன் பொட்டாஷ் உரம், 434 டன் சூப்பர் பாஸ்பேட் உரம் இருப்பில் உள்ளது. வேளாண் துறையின் மண்வள அட்டை பரிந்துரைப்படி குறைந்தளவு உரங்களை வாங்கி விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்றார்.