ADDED : மே 22, 2025 04:34 AM

தெருநாய் தொல்லை
மதுரை கோமதிபுரம் அல்லி வீதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. கூட்டம் கூட்டமாக அணிவகுத்து டூவீலரில் செல்வோரை துரத்திச் செல்வதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பெண்கள், குழந்தைகள் நடந்து செல்லவே அஞ்சுகின்றனர். நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும். மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா.
- ராகவன், கோமதிபுரம்.
பொங்கும் பாதாள சாக்கடை
மதுரை எஸ்.எஸ்.காலனி சத்தியமூர்த்தி நகரில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு ரோட்டில் கழிவுநீர் தேங்குகிறது. வயதானவர்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிற்குள் முடங்கும் நிலையுள்ளது. துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற வேண்டும்.
- ரங்கன், சத்தியமூர்த்தி நகர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க
மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதி, தெற்கு மாரட் வீதி சந்திப்பில் ரோட்டை ஆக்கிரமித்து பூக்கடைகள் செயல்படுகின்றன. இதனால் பாதசாரிகள் நடக்க வழியில்லாமல், ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றி இறக்க ரோட்டிலேயே நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாநகராட்சியும், போலீசாரும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
- அசோகன், தெற்குவாசல்.
திறந்தே கிடக்கும் பாதாள சாக்கடை
திருமங்கலம் காமாட்சி அம்மன் கோயில் தெரு அருகே பாதாள சாக்கடை சிலாப் உடைந்து திறந்த நிலையில் உள்ளது. எச்சரிக்கை பலகை ஏதுமில்லாததால் இரவில் டூவீலரில் செல்வோர், பாதசாரிகள் உள்ளே தவறி விழும் நிலையுள்ளது. உயிர்பலி ஏற்படும் முன் அதிகாரிகள் பாதாள சாக்கடையை சிலாப் கொண்டு மூட வேண்டும்.
- ராஜா, திருமங்கலம்.
ஆட்டோக்களால் அவதி
சோழவந்தானிலிருந்து செக்கானுாரணி, குருவித்துறை, விக்கிரமங்கலம் பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.மாரியம்மன் கோயில் பஸ் ஸ்டாப் அருகே நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வி.பிரியன், சோழவந்தான்.