ADDED : செப் 11, 2025 11:30 PM
அவனியாபுரம்: 'ஆடு, மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடுகள் நடைபெற உள்ளது. நாங்கள் மனிதர்களுக்கு மட்டுமான அரசியலாக இல்லாமல் அனைத்து உயிரினங்களுக்குமான அரசியலாக பார்க்கிறோம்,' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் மேலும் கூறியதாவது: நான் கூட்டத்தை வைத்து கட்சி ஆரம்பிக்கவில்லை. நான் நம்புவது கொள்கை, உண்மை, நேர்மையை தான்.
ஆண்ட அ.தி.மு.க., ஆளும் தி.மு.க., பா.ஜ., காங்கிரசோடு கூட்டணி வைத்து என்ன செய்யப் போகிறீர்கள். அவர்கள் 60 சதவீதம் கொள்ளையடித்தால், இவர்கள் 40 சதவீதம் கொள்ளை அடிப்பார்கள்.
மதுரை விமான நிலையத்திற்கு பாண்டிய நெடுஞ்செழியன் பெயரை வைத்தால் யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்றார்.
கச்சத் தீவை மீட்பேன் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் சீமான் அஞ்சலி செலுத்தினார். அவர் கூறியதாவது: தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் சமூகத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் கோரிக்கை. பா.ம.க., மற்றும் அ.தி.மு.க., உள் விவகாரங்களில் தலையிடுவது, பேசுவது நாகரிகம் அற்றது. நான் முதல்வராக பதவியேற்ற உடன் கச்சத் தீவை மீட்பேன்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெய்தல் பயணம் விரைவில் துவங்க உள்ளேன். அப்போது மக்கள் மத்தியில் இது குறித்து பேசுவேன் என்றார்.
த.வெ.க., தலைவர் விஜய் பிரசார பயணம் குறித்து எவ்வாறு பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, அதை நான் 'டிவி'யில் பார்த்து தெரிந்து கொள்வேன் என கிண்டலாக தெரிவித்தார்.