ADDED : ஜன 03, 2024 06:30 AM
மதுரை: டில்லியில் நடந்த இந்திய பொருளாதார கழக (ஐ.இ.ஏ.,) மாநாட்டில் மதுரை அமெரிக்கன் கல்லுாரி மாணவர்கள் கட்டுரை வாசித்தனர்.
பொருளாதார ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பது, நிபுணர்களிடையே பொருளாதார சிந்தனைகளை பரிமாறிக்கொள்வது உள்ளிட்ட நோக்கங்களை கொண்டு செயல்படும் இக்கழகத்தின் 106 வது மாநாடு டில்லி பல்கலை வல்லபாய் படேல் இன்ஸ்டிடியூட்டில் நடந்தது.
நிதிஆயோக் அமைப்பு துணைத் தலைவர் சுமன் பெரி பேசினார். புதுமை தொழில்நுட்பம், ஆராய்ச்சி தரவு, வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தலைப்புகளில் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அமெரிக்கன் கல்லுாரி பொருளியல் துறை மாணவர்கள் 10 பேர் கட்டுரை வாசித்தனர். கல்லுாரி முதுகலை ஆராய்ச்சித்துறைத் தலைவர் முத்துராஜா, பேராசிரியர் ஜெயராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முத்துராஜா கூறுகையில் இதுபோன்ற மாநாடுகள் துறைசார் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும். இளம் ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார்.