/உள்ளூர் செய்திகள்/மதுரை/வைகை அணையை துார்வார நடவடிக்கை உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்வைகை அணையை துார்வார நடவடிக்கை உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
வைகை அணையை துார்வார நடவடிக்கை உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
வைகை அணையை துார்வார நடவடிக்கை உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
வைகை அணையை துார்வார நடவடிக்கை உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
ADDED : பிப் 24, 2024 04:43 AM
மதுரை : 'தேனி மாவட்டம் வைகை அணையில் துார்வாரும் பணியை மேற்கொள்ள நீர்மட்டம் 40 அடிக்கும் குறைவாக இருக்க வேண்டும். நீர் இருப்பு குறித்து பரிசீலித்து, கிடைக்கிற நிதி ஆதாரம் அடிப்படையில் துார்வாரப்படும்,' என, அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்தது.
மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: வைகை அணை மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு முக்கிய நீராதாரம். இதை பொதுப்பணித்துறை முறையாக பராமரிக்கவில்லை. அணையில் 71 அடிவரை தண்ணீர் தேக்கலாம். 20 அடிக்கு சகதி படிந்துள்ளதால், நீர் தேங்கும் அளவு குறைந்து விட்டது. அணையை நம்பியுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உள்ளது. அணையில் சகதியை அகற்றி துார்வார நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: வைகை அணையில் 33.481 மில்லியன் கன மீட்டர் வண்டல் மண் படிந்துள்ளது. இதை 3 கட்டங்களாக துார்வார 'வாப்காஸ்' நிறுவனம் பரிந்துரைத்தது. அரசுக்கு செலவில்லாமல் மண்ணை துார்வாரி விவசாயிகளுக்கு விற்பனை செய்தால் ரூ.315.10 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசுக்கு ரூ.2.39 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நிதித்துறையின் பரிசீலனையில் உள்ளது.
அணையின் மொத்த கொள்ளளவான 71 அடியில் தற்போது 69.62 அடி நீர்மட்டம் உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், தற்போது துார்வாரும் பணியை மேற்கொள்வது சாத்தியமில்லை. துார்வாரும் பணியை மேற்கொள்ள நீர்மட்டம் 40 அடிக்கும் குறைவாக இருக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை, தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை நீர் வரத்து மற்றும் கொள்ளளவு காரணமாக துார்வார முடியாது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர் இருப்பிற்கு உட்பட்டு, துார்வாரும் பணியை மேற்கொள்ளலாம். தற்போதைய நீர் இருப்பை கருத்தில் கொண்டு துார்வாரும் பணியை மேற்கொள்ள முடியாது. கடந்த 4 ஆண்டுகளில் அணையின் நீர் மட்டம் 40 அடிக்கு கீழ் குறையவில்லை. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி, அணையில் நீர் இருப்பு குறித்து பரிசீலித்து, கிடைக்கின்ற நிதி ஆதாரம் அடிப்படையில் துார்வாரப்படும்.
இவ்வாறு அறிக்கை தாக்கல் செய்தது.
இதை பதிவு செய்த நீதிபதிகள்: துார்வார நிதியை ஒதுக்க தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.