Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/லட்சத்தீவு செல்வது ரொம்ப 'ஈசி' இந்தியா டூரிஸம் மண்டல இயக்குநர் தகவல்

லட்சத்தீவு செல்வது ரொம்ப 'ஈசி' இந்தியா டூரிஸம் மண்டல இயக்குநர் தகவல்

லட்சத்தீவு செல்வது ரொம்ப 'ஈசி' இந்தியா டூரிஸம் மண்டல இயக்குநர் தகவல்

லட்சத்தீவு செல்வது ரொம்ப 'ஈசி' இந்தியா டூரிஸம் மண்டல இயக்குநர் தகவல்

ADDED : ஜன 13, 2024 04:56 AM


Google News
Latest Tamil News
மதுரை : ''கொச்சியில் இருந்து கப்பல், விமானத்தில் லட்சத்தீவு செல்வது எளிது'' என மதுரை வந்த இந்தியா டூரிஸம் தென்மண்டல இயக்குநர் வெங்கடேசன் தத்தாத்ரேயன் தெரிவித்தார்.

இந்திய சுற்றுலாத்துறை சார்பில் மத்திய தொல்லியல் துறைக்குட்பட்ட மதுரை கீழக்குயில்குடி சமணர் மலையில் நடந்த பொங்கல்விழாவில் சமணர் மலைக்கான கையேட்டை வெளியிட்டு அவர் கூறியதாவது:

'ஏக் பாரத் ஸ்ரேஸ்தா பாரத்' திட்டத்தின் கீழ் மத்திய கல்வித்துறை மூலம் தமிழகம், காஷ்மீரை ஒருங்கிணைத்து கலை, கலாச்சாரத்தை பரப்ப திட்டமிட்டுள்ளோம். தமிழக இளைஞர்களுக்கு காஷ்மீர் பற்றிய பரந்து பட்ட பார்வையை விரிவுபடுத்துவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது நோக்கம். அதேபோல காஷ்மீரில் இருந்து வந்தவர்களுக்கு சென்னை கலாேஷத்ராவில் திருவிழா நடத்தியுள்ளோம்.

சுற்றுலா தலங்களை இளையோர் பாதுகாக்கும் வகையில் பள்ளி, கல்லுாரிகளில் தலா 25 மாணவர்களை ஒருங்கிணைத்து 'யுவா டூரிஸம்' குழுக்கள் உருவாக்கியுள்ளோம். இவர்கள் மூலம் சுற்றுலா தலங்களை சுத்தமாக வைத்திருப்பது, வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர் வரும் போது நமது பெருமைகளை எடுத்துச் சொல்வது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளில் 83 குழுக்கள் அமைத்துள்ளோம்.

சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மாமல்லபுரம், நீலகிரியில் மத்திய அரசின் நிதியின் கீழ் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்த உள்ளோம். வேளாங்கண்ணி, காஞ்சிபுரத்தில் ஏற்கனவே நிதி செலவிடப்பட்டுள்ளது. அடுத்ததாக கும்பகோணம் சுற்றியுள்ள 9 கோயில்களை ஒருங்கிணைத்து நவக்கிரகா திட்டத்திற்கான உள்கட்டமைப்பை உருவாக்க உள்ளோம்.

லட்சத்தீவில் சுற்றுலா அலுவலகம் உள்ளது. அரசு ஊழியர்கள் அங்கு சென்று வேலை செய்ய பர்மிட் தேவையில்லை. 'சமுத்ரா பாக்கேஜ்' எனப்படும் திட்டத்தின் கீழ் கேரளாவின் கொச்சியில் இருந்து கப்பல்கள் கவரத்தி தீவு செல்கின்றன. அங்கிருந்து படகுகள் மூலம் லட்சத்தீவின் பல்வேறு தீவுகளுக்கு செல்லமுடியும். டூர் ஆப்பரேட்டர்கள் மொத்தமாக அனுமதி பெற்று விடுவதால் கப்பலில் செல்லும் பயணிகளுக்கு தனி அனுமதி தேவையில்லை. தனியாக செல்பவர்களுக்கு 'ஆன்லைன் மூலம்' அனுமதி பெற வேண்டும்.

கொச்சியில் இருந்து விமானத்தில் அகாட்டி தீவு சென்று லட்சத்தீவை அடையலாம். சிறிய ஏர்போர்ட் என்பதால் செல்வதற்கு அனுமதி கட்டாயம். அனுமதி பெற்ற ஒரு மாதத்திற்குள் செல்லலாம். அங்கு நீர்விளையாட்டுகள், சாகச விளையாட்டுகள் என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய உள்ளன என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us