Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உயர்நீதிமன்ற உத்தரவை மீறி வசூலிக்கும் எலியார்பத்தி டோல்கேட்

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி வசூலிக்கும் எலியார்பத்தி டோல்கேட்

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி வசூலிக்கும் எலியார்பத்தி டோல்கேட்

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி வசூலிக்கும் எலியார்பத்தி டோல்கேட்

ADDED : ஜூன் 05, 2025 01:31 AM


Google News
திருமங்கலம்: மதுரை - துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையும் மீறி டோல்கேட் நிர்வாகம் நேற்று வசூலில் ஈடுபட்டதோடு வாகன ஓட்டுநர்கள், பொதுமக்களிடம் அடாவடியிலும் ஈடுபட்டது.

துாத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலை 135 கி.மீ., தொலைவுள்ளது. இச்சாலையில் துாத்துக்குடி - புதுார் பாண்டியாபுரம் மற்றும் மதுரை எலியார்பத்தி பகுதிகளில் டோல்கேட் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

2011 முதல் டோல்கேட் வசூலில் ஈடுபடும் நிறுவனம் ரோட்டின் 2 பக்கங்களிலும் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நட வேண்டும். சென்டர் மீடியனில் 68 ஆயிரம் அரளிச்செடிகள் நட வேண்டும். இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை. முறையாக ரோடு பராமரிப்பு பணி செய்யாமல் உள்ளது.

இந்நிலையில் துாத்துக்குடி மாவட்டம் பாலகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அதில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ரோடுகளை சீரமைக்கவும், இருபுறமும் மரங்கள் நடவு செய்வதோடு, வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் வரை கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என மனு கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் மதுரை - துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அருப்புக்கோட்டையை சேர்ந்த மலைராஜ் என்பவர் எலியார்பத்தி டோல்கேட்டை கடக்க முயன்றார். கட்டணம் வசூலிக்க தடை இருப்பதால் அவர் டோல்கேட்டை கடந்து செல்ல முயன்றார். அப்போது அவர் கார் மீது இரும்பு தடுப்பு பட்டு கண்ணாடி உடைந்தது.

அவர் ஊழியர்களிடம் கேட்டபோது, ''உயர்நீதிமன்ற உத்தரவு நகல் வந்தால்தான் சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்துவோம். அதுவரை வசூலில் ஈடுபடுவோம்'' என்றனர்.

அதேபோல நேற்றும் அந்த வழியாக சென்ற வாகனங்களிடம் டோல்கேட் ஊழியர்கள் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us