/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மகாளய அமாவாசையை முன்னிட்டு அழகர்கோவிலில் குவிந்த பக்தர்கள் மகாளய அமாவாசையை முன்னிட்டு அழகர்கோவிலில் குவிந்த பக்தர்கள்
மகாளய அமாவாசையை முன்னிட்டு அழகர்கோவிலில் குவிந்த பக்தர்கள்
மகாளய அமாவாசையை முன்னிட்டு அழகர்கோவிலில் குவிந்த பக்தர்கள்
மகாளய அமாவாசையை முன்னிட்டு அழகர்கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED : செப் 22, 2025 03:34 AM

அழகர்கோவில் : மகாளய அமாவாசையை முன்னிட்டு, அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.
ஆவணி மாத பவுர்ணமிக்கு பின் வரும் பிரதமை துவங்கி, 15 நாட்கள் 'மகாளய பட்ச காலம்' ஆகும். இக்காலத்தில், பித்ரு லோகத்தில் இருந்து குடும்பத்தினரைக் காண முன்னோர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம். இதன் நிறைவாக, புரட்டாசி மாதம் வரும் அமாவாசையே, மகாளய அமாவாசை. அன்று பித்ரு வழிபாட்டுடன், குல தெய்வ வழிபாடு செய்வதும் சிறந்தது. இதுவரை குல தெய்வத்தை வழிபடாத பாவமும், தோஷமும் நீங்கும் என்பது நம்பிக்கை.
இதையடுத்து நேற்று அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் புரட்டாசி சனிக்கிழமை, நேற்று அமாவாசையை முன்னிட்டு, பலருக்கும் குல தெய்வமாக விளங்கும் சுந்தரராஜ பெருமாள், பதினெட்டாம்படி கருப்பணசுவாமி, சோலைமலை முருகன், ராக்காயி அம்மனை தரிசிக்க, அருகிலுள்ள சிற்றுார்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்தனர்.
கோயில் வளாகத்தில் தங்கி, பொங்கலிட்டு, மாவிளக்கு, தேங்காய் தீபம் ஏற்றினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும், பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுத்தும், கருப்பணசுவாமி சன்னதி கதவுகளுக்கு மாலை, அரிவாள் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானக் கூடத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவருந்திச் சென்றனர்.
திருப்பரங்குன்றம் மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் குவிந்தனர்.
சாதாரண அமாவாசை தினங்களில் இறந்த முன்னோர்களுக்கு சரவணப் பொய்கையில் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
நேற்று மகாளய அமாவாசை என்பதால் வழக்கத்தை காட்டிலும் அதிகமானோர் வந்தனர். வழக்கமாக தர்ப்பணம் கொடுக்கம் இடம் தவிர படிக்கட்டுகளில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்தனர். அப்படி இருந்தும் கூட்டம் அதிகமாக இருந்ததால் அரை மணி நேரம் காத்திருந்தனர்.
சோழவந்தான் திருவேடகத்தில் ஏடகநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. காசி, ராமேஸ்வரத்திற்கு அடுத்து ஏராளமானோர் இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவர். ஆண்டுதோறும் ஆடி, மகாளய, தை அமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கானோர் வைகை ஆற்றங் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவர்.
இந்த ஆண்டும் வழக்கம்போல் கோபாலகிருஷ்ணன் ஐயர், ஸ்ரீ வர்ஷன் தலைமையில் பூஜைகள் செய்து ஏராளமானோர் வழிபட்டனர். பசு மாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுத்தும், கோயிலில் மோட்ச தீபம் ஏற்றியும் வழிபாடு நடந்தது. திரளானோர் வந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.