ADDED : பிப் 10, 2024 05:22 AM
திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டியில் ஆபத்தான நிலையில் உள்ள அரசு கிளை நுாலகத்திற்கு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என வாசகர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஹார்விபட்டி கிளை நுாலகத்திற்கு 1990ல் புதிய கட்டடம் கட்டப்பட்டது. தற்போது அக்கட்டடத்தின் உள், வெளிப்பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் நுாலகம் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுகிறது. இதனால் பகல் நேரத்தில் படிக்க வரும் வாசகர்கள் துர்நாற்றத்தால் தவிப்புக்குள்ளாகின்றனர்.
வாசக்ர செல்வராஜ் கூறுகையில், ''நுாலகத்தின் உட்பகுதி மேல் தளத்திலிருந்து பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன.
அப்பகுதியில் அமர்ந்து படிக்க யாரையும் அனுமதிப்பதில்லை. கட்டடம் முழுவதுமாக சேதமடைந்து விட்டது.
முன்பு நூலகத்திற்கு அனைத்து நாளிதழ்களும் வந்தன.
சில ஆண்டுகளாக குறிப்பிட்ட சில நாளிதழ்கள் மட்டும் வருகின்றன.
அவை அனைத்தையும் ஒன்றாக கட்டி வைப்பதால், ஒருவர் படித்து முடிக்கும்வரை மற்ற வாசகர்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.
மின்விளக்குகள் முழுமையாக எரிவதில்லை. மின்விசிறிகளும் இயங்குவதில்லை. நுாலகத்தில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார்.
அடிக்கடி நுாலகத்தை பூட்டிவிட்டு அலுவலக பணிக்காக மதுரைக்கு சென்று விடுகிறார். ஆபத்தான இந்த நூலக கட்டடத்தை அகற்றி விட்டு சுற்றுச்சுவருடன் புதிய கட்டடத்தை கட்ட வேண்டும். வாசகர்கள் படிப்பதற்கு அனைத்து நாளிதழ்களும் வேண்டும். கூடுதல் பணியாளர்களும் நியமிக்க வேண்டும் என்றார்.