/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வருவாய்க்கு அதிகமாக சொத்துகுவிப்பு சுங்கத்துறை அதிகாரி, மனைவிக்கு சிறை வருவாய்க்கு அதிகமாக சொத்துகுவிப்பு சுங்கத்துறை அதிகாரி, மனைவிக்கு சிறை
வருவாய்க்கு அதிகமாக சொத்துகுவிப்பு சுங்கத்துறை அதிகாரி, மனைவிக்கு சிறை
வருவாய்க்கு அதிகமாக சொத்துகுவிப்பு சுங்கத்துறை அதிகாரி, மனைவிக்கு சிறை
வருவாய்க்கு அதிகமாக சொத்துகுவிப்பு சுங்கத்துறை அதிகாரி, மனைவிக்கு சிறை
ADDED : மார் 23, 2025 03:47 AM
மதுரை : வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சுங்கத்துறை முன்னாள் கண்காணிப்பாளர் மற்றும் அவரது மனைவிக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம் விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
சென்னை வளசரவாக்கம் கோவிந்தசாமி 66. இவர் 1987 ல் மத்திய உள்துறை அமைச்சகத்தால் கலால்துறை ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். பின் சுங்கத்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று 2011 ஜூன் 6 முதல் 2012 ஏப்., 11 வரை துாத்துக்குடியில் பணியாற்றினார். பின் திருச்சி மத்திய கலால்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார்.
கோவிந்தசாமி மற்றும் அவரது மனைவி கீதாவின் 60, சொத்து தொடர்பான இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் 2012ல் சோதனை நடத்தினர். ஆவணங்களை கைப்பற்றினர்.
வருமானத்திற்கு அதிகமாக ரூ.ஒரு கோடியே 10 லட்சத்து 95 ஆயிரத்து 676 சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவர் மீதும் சி.பி.ஐ., வழக்கு பதிந்தது. மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி இருவரையும் விடுதலை செய்து அந்நீதிமன்றம் 2018 ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சி.பி.ஐ., தரப்பில் உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதி கே.கே.ராம கிருஷ்ணன்: வாழ்க்கையின் தத்துவம் லஞ்சம் வாங்குவது அல்ல. யாரேனும் லஞ்சம் வாங்கினால் அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் பாதிப்பு ஏற்படும். முறைகேடாக சம்பாதித்த பணத்தை அனுபவித்தால் துன்பப்பட நேரிடும்.
இந்நாட்டில் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு ஊழல் பரவியுள்ளது. ஊழல் என்பது வீட்டில் இருந்தே துவங்குகிறது. ஊழலுக்கு முடிவே இல்லை.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், 'ஊழல் செய்யாதீர்கள் என தங்கள் தந்தையிடம் குழந்தைகள் தைரியமாக கூற வேண்டும். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வீட்டிலிருந்தே இளைஞர்கள் துவங்க வேண்டும்,' என்றார்.
வருமானத்திற்கான ஆதாரத்தை நிரூபிப்பது குற்றம் சாட்டப்பட்டவரின் கடமை. சட்டப்படி பெறப்பட்ட தொகை குறித்து தனது துறைக்கு தெரிவிக்கப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கீழமை நீதிமன்றம் சாதாரண காரணங்களுக்காக சி.பி.ஐ., தரப்பு சாட்சிகளின் முக்கிய ஆதாரங்களை நிராகரித்துள்ளது. இருவரையும் விடுவிப்பதில் சட்ட ரீதியாக தவறிழைத்துள்ளது. நீதி நிர்வாகம் கேலிக்கூத்தாகி விடக்கூடாது என்பதற்காக, நீதியின் நலன் கருதி கீழமை நீதிமன்ற உத்தரவை இந்நீதிமன்றம் ரத்து செய்கிறது.
கோவிந்தசாமி, கீதாவிற்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை, கோவிந்தசாமிக்கு ரூ.75 லட்சம், கீதாவிற்கு ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.