/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரையில் இருந்து சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு; விதவிதமான 'மெத்தம்' வகை போதைப்பொருள் தயாரித்தது அம்பலம்மதுரையில் இருந்து சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு; விதவிதமான 'மெத்தம்' வகை போதைப்பொருள் தயாரித்தது அம்பலம்
மதுரையில் இருந்து சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு; விதவிதமான 'மெத்தம்' வகை போதைப்பொருள் தயாரித்தது அம்பலம்
மதுரையில் இருந்து சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு; விதவிதமான 'மெத்தம்' வகை போதைப்பொருள் தயாரித்தது அம்பலம்
மதுரையில் இருந்து சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு; விதவிதமான 'மெத்தம்' வகை போதைப்பொருள் தயாரித்தது அம்பலம்
UPDATED : பிப் 24, 2024 06:33 AM
ADDED : பிப் 24, 2024 04:49 AM
மதுரை : மதுரையில் நேற்றுமுன்தினம் ரூ.100 கோடி மதிப்புள்ள 'மெத்தம் பெட்டமைன்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இருவர் தலைமறைவாக உள்ளனர். மதுரையில் இருந்து நைஜீரியா உள்ளிட்ட சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை கே.கே.நகர் வித்யா காலனியைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி 57. இவரது வீட்டில் நேற்றுமுன்தினம் ரூ.100 கோடி மதிப்புள்ள 20 கிலோ 'மெத்தம் பெட்டமைன்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மத்திய நுண்ணறிவு போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தமீம் அன்சாரியை கைது செய்தனர். இவரது வீட்டை போதைப்பொருள் பாதுகாக்கும் இடமாக சென்னை அன்பு, திருச்சி அருண் ஆகியோர் பயன்படுத்தி வந்துள்ளனர். இருவரும் அவ்வப்போது மதுரை வந்து போதைப்பொருளை வைத்துவிட்டு செல்வதும், சில நாட்களுக்கு பிறகு எடுத்துச்செல்வதுமாக இருந்துள்ளனர்.
இதை போலீசார் சில வாரங்களாக நோட்டமிட்டு சோதனை செய்தபோதுதான் போதைப்பொருள் கடத்தல் வெளிச்சத்துக்கு வந்தது. அன்பு, அருண் தலைமறைவாக உள்ளனர். இருவரையும் பிடித்தால் மட்டுமே முழு விபரம் தெரியவரும் என்கின்றனர் போலீசார்.
போலீசார் கூறியதாவது: இருவரும் நைஜீரியா நபர்களிடம் போதைப்பொருட்களுக்கான மூலப்பொருட்களை வாங்கி தமீம் அன்சாரி வீட்டில் பதுக்கி வைத்து வந்துள்ளனர். வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப மதுரை வந்து தேவையான அளவு தயாரித்து எடுத்துச்சென்றுள்ளனர். தமீம் அன்சாரி வீட்டில் விதவிதமான 'மெத்தா' வகை போதைப்பொருட்களுக்கான மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு கிராமை ரூ.5 ஆயிரம் வரை விற்றுள்ளனர்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தால் மட்டுமே 'மெத்தா' வகை போதைப்பொருள் எளிதாக கிடைக்கும் என்பதால், அக்கும்பலுடன் அன்பு, அருணுக்கு நேரடி தொடர்பு இருப்பது உறுதியாகிறது. இருவரையும் கைது செய்ய தனிப்படை சென்றுள்ளது. புழல் சிறையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் உள்ள நைஜீரியர்களிடமும் இதுகுறித்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம் என்றனர்.