ADDED : செப் 03, 2025 09:27 AM
மேலுார்; மேலுாரில் பஸ் கால அட்டவணையை சமூக விரோதிகள் கிழித்ததால், பயணிகள் பஸ்சுக்காக பல மணி நேரம் காத்து கிடக்கும் அவலம் நிலவுகிறது.
மேலுார் தாலுகாவில் 84 வருவாய் கிராமங்கள் உள்ளன. இம்மக்களுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 54 வழித்தடங்களில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தினமும் பயணிக்கின்றனர்.
இவர்களன் வசதிக்காக பஸ் கால அட்டவணை பயணச்சீட்டு கொடுக்கும் இரண்டு இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தது. அதனை யாரோ கிழித்து விட்டனர்.
பயணிகள் கூறியதாவது: அட்டவணையில் பஸ்கள் வந்து செல்லும் நேரம் இருந்தது, பயணிகளுக்கு பேருதவியாக இருந்தது. தற்போது 2 அட்டவணைகளையும் கிழித்து விட்டதால் பஸ்களின் நேரம் தெரியாமல், பயணிகள் பல மணி நேரம் காத்துக் கிடக்கிறோம். அலுவலகம், பள்ளி, கல்லுாரிகளுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம் என்றனர்.
டெப்போ மேலாளர் சண்முக குமார் கூறுகையில், ''பயணிகள் வசதிக்காக மீண்டும் பஸ்கால அட்டவணையை ஒட்ட ஏற்பாடு செய்யப்படும் என்றார்.