Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஸ்டாலினுக்கு கறுப்பு கொடி: முன்னாள் அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை

ஸ்டாலினுக்கு கறுப்பு கொடி: முன்னாள் அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை

ஸ்டாலினுக்கு கறுப்பு கொடி: முன்னாள் அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை

ஸ்டாலினுக்கு கறுப்பு கொடி: முன்னாள் அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை

ADDED : ஜூன் 13, 2025 02:11 AM


Google News
மதுரை:''அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமியை விமர்சித்தால் முதல்வர் ஸ்டாலினுக்கு அ.தி.மு.க., தொண்டர்கள் சார்பில் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் துவக்குவோம்,'' என, மதுரையில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் எச்சரித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது: ஒரு விவசாயி மகானக பிறந்து 'விவசாய முதல்வர்' என பெயர் எடுத்து மக்களுக்கு சேவை செய்து வருகிறார் பழனிசாமி. அவரது செல்வாக்கை கண்டு நடுங்கி போய் ஸ்டாலின் உதிர்த்த அநாகரிக வார்த்தைகள் விவசாயிகளை வேதனையடைய வைத்தள்ளது.

தி.மு.க., 2021 ல் கொடுத்த 525 தேர்தல் வாக்குறுதிகளில், 'மதுரை வேளாண்மை கல்லுாரி பல்கலையாக மாற்றப்படும்' என அறிவிக்கப்பட்டது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் நான்கரை ஆண்டு ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஒரு துரும்பை கூட எடுத்துப்போடவில்லை.

விவசாயிகள் பாதுகாவலர் எனக் கூறிக்கொள்ளும் நீங்கள், முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவோம் என கேரளா கூறியபோதும், மேகதாது குறுக்கே அணையை கட்டுவோம் என கர்நாடக துணை முதல்வர் தமிழகத்திற்கு வந்து பேசியபோதும், பாலாறு அருகே குறுக்கே அணைக்கட்டுவோம் என ஆந்திரா கூறியபோதும் மவுனமாக இருந்து, தமிழக விவசாயிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது நினைவு இருக்கிறதா.

ஆனால் காவிரியை மீட்டு தந்தது, முல்லை பெரியாறு அணைக்கு சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசு ஆகும். காவிரி திட்டம், குடிமராமத்து திட்டம், 60 ஆண்டுகால கனவான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தவர் பழனிசாமி.

மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்து தி.மு.க., காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உருவாக்கியவர் பழனிசாமி. அவரை விவசாயிகள் பாதுகாவலர் என சொன்னால், அவர் பச்சை துண்டு போட்டால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது.

நீங்கள் கரும்பு தோட்டத்தில் சிமென்ட் ரோடு அமைத்து ஷூ அணிந்து சென்றதை யாரும் மறக்கவில்லை. நீங்கள் ஒரு தலைவன் மகனாக பிறந்து முதல்வராக வருவது சாதனை அல்ல. பழனிசாமி விவசாயி மகனாக பிறந்து முதல்வராக உயர்ந்தது தான் சாதனை. இதை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் அரசு விழாக்களில் அ.தி.மு.க.,வையும், பொது செயலாளரையும் இனி விமர்சித்தால் நீங்கள் எங்கே சென்று கூட்டம் நடத்தினாலும் அ.தி.மு.க., தொண்டர்கள் சார்பில் கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தை துவக்குவோம் என எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us