ADDED : ஜன 11, 2024 04:50 AM
மதுரை : ''நல்ல திட்டங்களை தருவதால்தான் மக்கள் பா.ஜ., பக்கம் உள்ளனர். சினிமாவை நம்பி பா.ஜ., இல்லை'' என ஹிந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் பேசினார்.
மதுரையில் நாதுராம் கோட்சே திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:
ஜாதி வேறுபாட்டை வைத்து திரைப்படம் எடுக்கும் இயக்குநர்கள் தீண்டாமையை ஒழிக்க எண்ணவில்லை.
ஜாதி கலவரத்தை துாண்டவேண்டும் என்று உள்நோக்கத்தில் படம் எடுக்கிறார்கள். திராவிட கட்சிகள் பட்டியலின மக்களை கீழ்மட்டத்திலே வைத்துள்ளன. திறமை உள்ளவர்களை மதிக்க தெரியவில்லை.
இளையராஜாவை இசைக்கடவுளாக பாவித்து அவருக்கு உயர்பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரின் திறமைக்கு இதுவே போதவில்லை என்றுதான் கருதுகிறோம்.ஆட்சி அதிகாரம் கையில் உள்ளவர்களிடம் சினிமா நட்சத்திரங்கள் போக வேண்டிய கட்டாயம். படம் தயாரிப்பு,வெளியிடும் அதிகாரத்தை வைத்துள்ளதால் இவர்களை அனுசரிக்க வேண்டியுள்ளது.
நல்ல திட்டங்களை தருவதால்தான் மக்கள் பா.ஜ., பக்கம் உள்ளனர். சினிமாவை நம்பி பா.ஜ., இல்லை என்றார்.
நிகழ்ச்சியில் நிலையூர் ஆதினம், மன்னார்குடி ஜீயர்,தென்னிந்திய பா.பி., தலைவர் திருமாறன், பா.ஜ., நகர் தலைவர் மகா சுசீந்திரன், ஹிந்து மக்கள் கட்சிமாவட்ட தலைவர் சோலைகண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.