/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வரி முறைகேடு வழக்கில் ஜாமின்: கட்சி வேஷ்டி அளித்து வரவேற்பு பதவியிழந்த மண்டல தலைவரின் கணவரால் சர்ச்சை வரி முறைகேடு வழக்கில் ஜாமின்: கட்சி வேஷ்டி அளித்து வரவேற்பு பதவியிழந்த மண்டல தலைவரின் கணவரால் சர்ச்சை
வரி முறைகேடு வழக்கில் ஜாமின்: கட்சி வேஷ்டி அளித்து வரவேற்பு பதவியிழந்த மண்டல தலைவரின் கணவரால் சர்ச்சை
வரி முறைகேடு வழக்கில் ஜாமின்: கட்சி வேஷ்டி அளித்து வரவேற்பு பதவியிழந்த மண்டல தலைவரின் கணவரால் சர்ச்சை
வரி முறைகேடு வழக்கில் ஜாமின்: கட்சி வேஷ்டி அளித்து வரவேற்பு பதவியிழந்த மண்டல தலைவரின் கணவரால் சர்ச்சை
ADDED : செப் 04, 2025 05:09 AM

மதுரை: மதுரை மாநராட்சியில் ரூ. பல கோடி சொத்துவரி முறைகேட்டில் கைதாகி ஜாமினில் வெளியே வந்தவர்களுக்கு, மண்டலம் 3ன் முன்னாள் தலைவர் பாண்டிச்செல்வியின் கணவர் பாண்டியன் (முன்னாள் துணை மேயர்) தி.மு.க., கரை வேஷ்டி அளித்து வரவேற்பு அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இவ்வழக்கில் தற்போதைய மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் உட்பட 19க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றம் வழிகாட்டுதலில் மதுரை டி.ஐ.ஜி., அபினவ்குமார் தலைமையில் இவ்வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணையில் ஆரம்பத்தில் மண்டலம் 3ன் அலுவலகத்தில் மண்டல தலைவரின் நேர்முக உதவியாளரான தனசேகரன், புரோக்கர்கள், தற்காலிக பணியாளர்களான ராஜேஷ், சாகா உசேன், சதீஷ், நுார்முகமது உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் வாக்குமூலத்தில் எப்படி சொத்துவரி முறைகேடு செய்யப்பட்டது என்றும், ஒரு மண்டல தலைவரின் கணவர் குறித்தும் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு தீவிரமடைந்த நிலையில் 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக் குழு தலைவர்களை பதவி விலக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனால் அவர்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். தற்போதும் இவ்வழக்கு தொடர்ந்து நடக்கிறது.
இந்நிலையில், முதலில் கைது செய்யப்பட்ட சாகா உசேன் உட்பட 5 பேருக்கு ஜாமின் கிடைத்தது. அவர்கள் வெளியே வந்துள்ள நிலையில், அவர்களை மண்டலம் 3ன் முன்னாள் தலைவர் பாண்டிச்செல்வியின் கணவர் பாண்டியன் அழைத்து அவர்களுக்கு சால்வை, தி.மு.க., கரை வேஷ்டி அளித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது: மண்டலம் 3ல் தான் சொத்துவரி முறைகேடு தொடர்பாக புகார்கள் அதிகம் இருந்தது. மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையும் அந்த மண்டலத்தை நோக்கி தான் இருந்தது.
ஆனால் அரசியலுக்காக 5 மண்டல தலைவர்களையும் புகாருக்குள் சிலர் கொண்டு வந்தனர். இதனால் 5 பேருமே பதவி விலக நேர்ந்தது.
ஆரம்பத்தில் இருந்தே போலீஸ் விசாரணையை விமர்சிக்கும் வகையில் மண்டலம் 3ன் தலைவரின் கணவர் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்து வருகிறார். தற்போது முறைகேட்டில் சிக்கி கைதானவர்களை அழைத்து ஏதோ கட்சிக்காக தியாகம் செய்து ஜெயிலுக்கு சென்று வந்தவர்கள் போல் அவர்களுக்கு தி.மு.க., கரை வேஷ்டி அளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் அமைச்சர் தியாகராஜனின் தீவிர ஆதரவாளர் என்பதால் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட எதுவும் கூறமுடியவில்லை என்றனர்.
இதுகுறித்து பாண்டியன் கூறுகையில், அவர்கள் தி.மு.க., தொண்டர்கள். தேர்தலின்போது கட்சி பணியாற்றியவர்கள்.
அவர்களில் ராஜேஷூக்கு நேற்றுமுன்தினம் பிறந்த நாள். அதற்காக அவர்கள் என்னை சந்திக்க வந்தனர்.
வரும்போது எனக்கு கொடுப்பதற்காக கட்சி வேஷ்டி கொண்டுவந்தனர். அதை வாங்கி அவருக்கே கொடுத்தேன். அவர்கள் ஜாமினில் வந்து பல நாட்களாகின்றன என்றார்.