Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/கல்லா' கட்டிய கட்டட கமிட்டி * முறைகேட்டில் ஈடுபட்ட மாநகராட்சி நகரமைப்பு குழு * விசாரணை 'கமிஷன்' அமைக்க அ.தி.மு.க., வலியுறுத்தல்

கல்லா' கட்டிய கட்டட கமிட்டி * முறைகேட்டில் ஈடுபட்ட மாநகராட்சி நகரமைப்பு குழு * விசாரணை 'கமிஷன்' அமைக்க அ.தி.மு.க., வலியுறுத்தல்

கல்லா' கட்டிய கட்டட கமிட்டி * முறைகேட்டில் ஈடுபட்ட மாநகராட்சி நகரமைப்பு குழு * விசாரணை 'கமிஷன்' அமைக்க அ.தி.மு.க., வலியுறுத்தல்

கல்லா' கட்டிய கட்டட கமிட்டி * முறைகேட்டில் ஈடுபட்ட மாநகராட்சி நகரமைப்பு குழு * விசாரணை 'கமிஷன்' அமைக்க அ.தி.மு.க., வலியுறுத்தல்

ADDED : ஜூன் 29, 2024 04:56 AM


Google News
Latest Tamil News
மதுரை : மதுரை மாநகராட்சி நகரமைப்பு குழு மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க தனி விசாரணை குழு அமைக்க வேண்டும் என அ.தி.மு.க., வலியுறுத்தியது.

இக்கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. மேயர் பேசுகையில், லோக்சபா தேர்தலில் தி.மு.க.,விற்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்ததன் மூலம் மாநகராட்சி செயல்படுத்தி வரும் திட்டங்களை மக்கள் பாராட்டுகின்றனர் என்பது தெளிவாகிறது. இது மேலும் பல்வேறு திட்டங்களை மாநகராட்சி மேற்கொள்ள உத்வேகம் தந்துள்ளது என்றார்.

பின் நடந்த விவாதம்:

* வாசுகி, தலைவர், மண்டலம் 1: விரிவாக்கம் செய்யப்பட்ட வார்டுகளில் பல இடங்களில் வீடுகளுக்கு வழங்கப்பட்ட பாதாளச் சாக்கடை இணைப்புகளில் 'சேம்பர்' அமைப்பது பல்வேறு இடங்களில் விடுபட்டுள்ளது. தமுக்கம் அரங்கம் பராமரிப்புக்கு தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதற்கு ஏற்ப வருவாய் கிடைக்கிறதா. வார்டுகள் சமுதாய கூட்டங்களை மாநகராட்சி கல்யாண மண்டபங்களாக மாற்றலாம். உச்சபரம்பு உள்ளிட்ட பகுதிகளில் தோராய பட்டாக்களுக்கு பொட்டல் வரி செலுத்த முடியாததால் அப்பகுதியில் மின் இணைப்பின்றி மக்கள் தவிக்கின்றனர்.

* சரவணபுவனேஸ்வரி, தலைவர், மண்டலம் 2: நகருக்குள் செல்லும் பொதுப் பணித்துறைக்கு உட்பட்ட முக்கிய கால்வாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை அத்துறை சரிசெய்ய நடவடிக்கை இல்லை.

* கமிஷனர்: பந்தல்குடி தவிர 16 கால்வாய்கள் ஆய்வு செய்யப்பட்டு, எந்த இடத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துரு தயாரிக்கப்படுகிறது. அரசுக்கு அனுப்பி, அதற்கான நிதியை பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* சரவணபுவனேஸ்வரி: வார்டுகளில் உள்ள பம்பிங் ஸ்டேஷன்களில் உரிய பராமரிப்பு இல்லை. வார்டுகளை கவனிக்கும் ஏ.இ.,க்கள் தான் இதையும் பராமரிக்க வேண்டியுள்ளது. இதனால் பல இடங்களில் பாதாளச் சாக்கடை பொங்கும் பிரச்னை ஏற்படுகிறது.

* பாண்டிச்செல்வி, தலைவர், மண்டலம் 3: பல்வேறு வார்டுகளில் பாதாளச் சாக்கடை பிரச்னை உள்ளது. நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும்.

* கமிஷனர்: பழைய பாதாளச் சாக்கடை அமைப்பு தன்மை குறித்து தனியார் அமைப்பு ஆய்வு செய்கிறது. முழுமையாக மாற்றிவிட முடியாது. 70 சதவீதம் தற்போது தேவைக்கு ஏற்ப மாற்ற முடியும். அப்பணி நடக்கிறது. ஜூலைக்குள் அந்த நிறுவனம் ரிப்போர்ட் சமர்ப்பிக்கும்.

* சுவிதா, தலைவர், மண்டலம் 5: வீடுகளுக்கான குடிநீர் குழாய் இணைப்புக்காக தோண்டப்பட்டு பல்வேறு இடங்களில் சரியாக மூடப்படுவதில்லை. அப்பணியை செய்யும் நிறுவனத்தினர் கவுன்சிலர்களிடம் ஆலோசிப்பதில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கிறது.

* மேயர்: கவுன்சிலர்களிடம் ஆலோசனை நடத்த அறிவுறுத்தப்படும்.

* சுவிதா: விரிவாக்க வார்டுகளில் அடிப்படை வசதிகள் இல்லை. பலமுறை கேட்டும் நடவடிக்கை இல்லை. இப்பகுதிகளை மேம்படுத்த தனி அதிகாரிகள் நியமிக்க வேண்டும். தெரு விளக்குகள் அமைப்பதில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதில் அளிப்பதில்லை. கண்மாய்களை துார்வார வேண்டும்.

* சோலைராஜா (அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர்): மாநகராட்சி நகரமைப்பு குழு விதிமீறல் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. மின் இணைப்பு பெற குழு சார்பில் பணிநிறைவு சான்று அளித்துள்ளது. மின்வாரியம் புகார் தெரிவித்த பின் தான் மாநகராட்சிக்கு முறைகேடு தெரியவந்துள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் மே 4ல் செய்தி வெளியானது (தினமலர் நாளிதழை காண்பித்தார்). இதுதொடர்பாக நகராட்சி நிர்வாக இயக்குநர் அளவில் விசாரணை நடந்துள்ளது. மேலும் இரண்டு மாடி வீடு என அனுமதி பெற்று, வணிக ரீதியாக 5 மாடி கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டு மோசடி நடந்துள்ளது. அதிகாரிகள் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து விசாரிக்க மாநகராட்சி விசாரணை குழு அமைக்க வேண்டும்.* சோலைராஜா: பெரியாறு கூட்டுக்குடிநீர் வீடுகளுக்கு எப்போது கிடைக்கும்.

* கண்காணிப்பு பொறியாளர்: செப்.,25க்குள் பணிகள் முடிக்க வாய்ப்புள்ளது. அதன் பின் வீடுகளுக்கு குடிநீர் கிடைக்கும்.

* கார்த்திகேயன் (காங்.,): புதிய ரோடுகள் தரமானதாக இல்லை. கனரக லாரிகள் சென்று சேதமடைந்து வருகிறது. நாய்கள் தொல்லை தாங்க முடியவில்லை. புகார் அளித்தால் நடவடிக்கை இல்லை.

* வினோத்குமார், நகர்நல அலுவலர்: நாய்களை பிடிக்க புதிதாக 4 வண்டிகள் வாங்கப்பட்டுள்ளன. நாய்களுக்கு கு.க., சிகிச்சை மேற்கொள்ள 2 டாக்டர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

* சோலைராஜா: மாநகராட்சி வார்டுகள் விரிவாக்கம் உள்ளதா. அவ்வாறு மேற்கொள்ளப்பட்டால் 5 மண்டலங்களிலும் சமமாக வார்டுகள் விரிவாக்கம் செய்ய வேண்டும்.

* கமிஷனர்: வார்டுகள் விரிவாக்கம் செய்ய முதலில் மக்களிடம் கருத்து கேட்கப்படும். அதன் பின் கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன்பின் தான் நடவடிக்கையே துவங்கும்.

* சோலைராஜா: மாநகராட்சியில் தனியார் நிறுவனத்தால் குப்பை அள்ளப் பயன்படுத்தப்படும் 152 வாகனங்களில் 42 வாகனங்களுக்கு எப்.சி., இல்லை. விபத்து ஏற்பட்டால் மாநகராட்சிக்கு பெரும் இழப்பு ஏற்படும்.

* கமிஷனர்: இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஜெயராம் (தி.மு.க.,): நகரில் 600 துாய்மை பணியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு 5 ஆண்டுகளாக சீருடை வழங்கவில்லை ஏன்.

* நகர்நல அலுவலர்: இந்தாண்டு விரைவில் வழங்கப்படும்.

* ஜெயராம்: பாதாளச் சாக்கடை கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் கோவையில் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வாடகை செலுத்தி மதுரையில் பயன்படுத்தப்படுகிறது. 31 நாட்களுக்கான வாடகையை மாநகராட்சி வழங்கியுள்ளது. இதற்கு பதில் சொந்தமாகவே அந்த வாகனத்தை வாங்கலாமே.

* கமிஷனர்: வாகனம் வாங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

* நாகநாதன் (தி.மு.க.,): 67 வது வார்டில் விடுபட்ட 8 கி.மீ., பகுதிக்கு பாதாளச் சாக்கடை வசதி எப்போது கிடைக்கும். மாநகராட்சியில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்கள் எத்தனை. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சேதமடைந்த பாதாளச் சாக்கடை பகுதி எப்போது சீரமைக்கப்படும். பிளான் அப்ரூவலுக்கு லைசென்ஸ் பொறியாளர்கள் போலி 'டிடி' கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதில் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன. விதி மீறி பிளான் அப்ரூவல் அளிக்கப்பட்டுள்ளன (அதற்கான ஆவணங்களை கமிஷனருக்கு வழங்கினார்).

* கமிஷனர் மற்றும் மாலதி, (சி.டி.பி.ஓ.,): 'டிடி' சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உரிமம் நீட்டிப்பு வழங்கப்படவில்லை. பிளான் அப்ரூவலில் விதிமீறல் இல்லை. விதிமீறல் கட்டடங்கள் விபரம் தொடர்பாக கலெக்டர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

* நாகநாதன்: முறைகேட்டில் ஈடுபட்ட பொறியாளர்கள் மீது குற்றநடவடிக்கை இல்லையா. மாநகராட்சியில் 'லே அவுட்டு'கள் நகரமைப்பு குழுவில் வைக்கப்படாமல் அனுமதி வழங்கப்படுகிறது. இது தவறான முன்உதாரணம் ஆகும்.

* கமிஷனர்: நகரமைப்பு குழு தொடர்பாக புகார்கள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் அளவில் விசாரணை நடக்கிறது. அதுவரை செயல்படாது. விசாரணை முடிந்த பின் தான் நகரமைப்பு குழு செயல்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

* அரசரடி குடிநீர் தொட்டியில் பறவைகள்

//தி.மு.க., கவுன்சிலர் ஜெயராம் பேசுகையில், லட்சக்கணக்கான வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் அரசரடி நீர்த்தேக்க தொட்டியில் மேற்பகுதி உடைந்து பலநாட்கள் ஆகின்றன. பறவைகள் செத்து மிதக்கின்றன. யாராவது விஷம் கலந்தால் அரசுக்கு கெட்ட பெயர் வராதா. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.அதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் பதில் அளித்தார். மேயர் பேசுகையில், உங்களுக்கு இத்தகவல் எப்போது தெரியும். கவுன்சில் கூட்டம் நடக்கும் வரை ஏன் மாநகராட்சி கவனத்திற்கு கொண்டுவரவில்லை எனக் கூறி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.தொடர்ந்து ஜெயராம் பேசுகையில், மாநகராட்சி இலவச கழிப்பறைகளை பராமரிக்க தனியாருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு ரூ.5.90 லட்சம் வழங்க கோரப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அழகிரி எம்.பி.,யாக இருந்தபோது இதுபோன்ற மாநகராட்சி கழிப்பறைகளை சி.எஸ்.ஆர்., திட்டத்தில் சேவை அடிப்படையில் பராமரிக்க நடவடிக்கை எடுத்தார். இது மக்கள் பாராட்டை பெற்றது. அதுபோல் தற்போது மாநகராட்சி நடவடிக்கை எடுத்தால் கோடிக்கணக்கில் நிதி செலவினம் தவிர்க்கப்படும் என்றார். இதற்கு 'அதுபோல் நடவடிக்கை எடுக்கும் திட்டம் உள்ளது. விரைவில் அமலுக்கு கொண்டுவரப்படும்' என கமிஷனர் பதில் அளித்தார்.



* அலுவலர்கள் வெளிநடப்பு

//கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் ஜெயசந்திரன் அவரது வார்டில் குழாய் இணைப்புகளை மாநகராட்சி துண்டித்த நடவடிக்கை குறித்து அலுவலர்களை ஒருமையில் பேசி, சண்டையிடுவது போல் பேசினார். இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்து கூட்டத்தில் இருந்து அலுவலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டம் நிகழ்வு பாதித்தது. இதையடுத்து கமிஷனர் அழைப்பை ஏற்று மீண்டும் அரங்கிற்குள் வந்தனர். மேயர் பேசுகையில், கூட்ட அரங்கில் உறுப்பினர்கள் உரிய மரபை பின்பற்ற வேண்டும். சண்டையிடுவது போல் பேசக்கூடாது என அறிவுரை வழங்கினார். இதன் பின் உறுப்பினர் கேள்விக்கு கமிஷனர் பதில் அளித்தார்.



அ.தி.மு.க., ஆஜர்...

தி.மு.க., 'மிஸ்சிங்'//* கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர். அச்சம்பவத்திற்கு அ.தி.மு.க., கண்டனம் தெரிவித்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜ., கவுன்சிலர் பாமாவும் 'முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்' என கோஷமிட்டு எதிர்ப்பை தெரிவித்தார்.* தி.மு.க., கவுன்சிலர் துரைப்பாண்டி தனக்கு கூட்ட அஜந்தா வரவில்லை என மேயரிடம் புகார் தெரிவித்தார். ஆனால் அவரது பெயரில் போலி கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட அஜந்தா வினியோகிக்கப்பட்டது தெரியவந்தது. 'இதுகுறித்து விசாரித்து பில் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என கமிஷனர் எச்சரித்தார்.* 84வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் போஸ் முத்தையா காலை 10:38 மணிக்கு கூட்டத்திற்கு வந்தார். 10:40க்கு வெளியேறினார். வந்தவுடன் 2 நிமிடங்களில் வெளியேறி விடுகிறார் என்பதால் அவரை '2 நிமிட கவுன்சிலர்' என அ.தி.மு.க.,வினர் 'கமென்ட்' அடித்தனர்.* பிப்ரவரிக்கு பிறகு நேற்று நடந்த இக்கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் பங்கேற்றனர். அதேசமயம் தி.மு.க., கவுன்சிலர் பலர் விக்கிரவாண்டி தேர்தல் பணிக்கு சென்றதால் 'ஆப்சென்ட்' ஆயினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us