Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நடுவுல கொஞ்சம் பக்ஸ்....

நடுவுல கொஞ்சம் பக்ஸ்....

நடுவுல கொஞ்சம் பக்ஸ்....

நடுவுல கொஞ்சம் பக்ஸ்....

ADDED : ஜூன் 22, 2025 03:38 AM


Google News
Latest Tamil News
வசனங்கள் ஏதும் இல்லாமல் கூட தன் பெரிய கண்களாலே ரசிகர்களை சிரிக்க வைப்பதுடன் திகில் ஊட்டியும் வருபவர் இவர். டூரிஸ்ட் பேமிலி, கேங்கர்ஸ், தக் லைப் என திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க கேரக்டர்களில் நடித்து அடுத்தடுத்து வெளியாகி ஹிட் ஆன சினிமாக்களால் உற்சாகத்திலிருக்கிறார் காமெடி ஆக்டர் பக்ஸ். தற்போது 15 புதுப்பட வாய்ப்புகள் கதவை தட்டியிருப்பதாகவும் மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருக்கிறார்.

இனி அவரே தொடர்கிறார்...

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகிலுள்ள ஒரு கிராமம் தான் சொந்த ஊரு. சின்ன வயதிலேயே சினிமா இயக்குனராக ஆசை. ஆனால் அண்ணன் உள்ளிட்டோர் படித்து செட்டிலானாலும் கூட, நான் சும்மாவே சுற்றி திரிந்ததை அப்பாவே ஒரு காலக்கட்டத்தில் யோசித்திருக்கிறார்.

தமிழ் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்த போது கன்னட படம் ஒன்றில் உதவி இயக்குனராகும் வாய்ப்பு கிட்டியது. கார்த்திக் ரகுராம் இயக்கிய கன்னட படம் தான் நான் உதவி இயக்குனரான முதல் படம். பிறகு கவுதம் மேனனின் காக்க காக்க படத்தில் பணிபுரிந்தேன். ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் அசோசியேட் டைரக்டரானேன். அந்த நிலையில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடி அவர் தலையில் அடிபட்டு சுயநினைவு மறப்பது நான் திரு திரு என விழிப்பது போன்ற காட்சி மக்களிடம் என்னை கொண்டு போய்சேர்த்தது.

முதலில் இந்த காட்சி ஓரளவுக்கு ரீச் ஆகும் எனக் கருதினோம். ஆனால் இந்தளவுக்கு ரீச் ஆகும் என நினைக்கவில்லை. 2012ல் அந்த படம் ரீலீஸ் ஆனது. இன்றளவும் வரவேற்பு இருக்கிறது. சற்று கடினமான நேரங்களில் இந்த படத்தை பார்த்து ரிலாக்ஸ் ஆனதாக பெரிய ஆக்டர்களே கூற கேட்டிருக்கிறேன். எதிர்பாராத வரம் இது.

பொதுவாக எனக்கு முரட்டு கண்கள். சிறிய வயதில் அப்பா, அண்ணன், நண்பர்கள் என்னை 'முட்டக்கண்ணன்' என அழைப்பர். மனது கஷ்டமாக இருக்கும். நாம் எதை சாபமாக நினைக்கிறோமோ அதுதான் வரமாக உள்ளதை கவனிக்க தவறி விடுகிறோம். என் கண்கள் தான் இந்தளவு வாய்ப்பை பெற்று தந்தது. நெகடிவ் ஆக கருதிய கண்கள் எனக்கு பாசிடிவ் ஆக இருப்பதை கண்டு எனக்கே ஒரு புரிதலும் ஏற்பட்டது.

96 படத்தில் கூட எனக்கு இணையாக நடித்த தேவதர்ஷினியிடம் கண்களாலே ஜாடை செய்யும் காட்சியையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

டூரிஸ்ட் பேமிலி, கேங்கர்ஸ், தக் லைப் படங்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் 15 புதுப்பட வாய்ப்புகள் வந்தன. கதை, கேரக்டர்களை பொறுத்து இரு படங்களை மட்டுமே ஒப்பு கொண்டிருக்கிறேன். ஸ்கிரிப்ட், ஸ்டோரி, கேரக்டர் பொறுத்து தான் படங்களை ஒப்பு கொள்வேன்.

ரஜினி- - கமல்


ஜெயிலர் பட முதல் நாள் ஷூட்டிங்கில் 'ரஜினி அழைத்து ரொம்ப நாளாக உங்களை பார்க்க வேண்டும் என நினைத்தேன். பரவாயில்லை; நல்லா பண்றீங்க' என அவருக்கே உரித்தான ஸ்டைலில் பாராட்டியதை மறக்க முடியாது. தக் லைப் ஷூட்டிங்கில் இயக்குனர் மணிரத்னம், என்னை கமலிடம் அறிமுகப்படுத்திய போது, அவர் முந்திக்கொண்டு இவரை நன்றாக தெரியும் என்றார். இதை விட வேறு என்ன வேண்டும் எனக்கு.

நண்பர்களுடன் ஊரில் ரஜினி, கமல் படங்களை பார்த்த எனக்கு இன்று அவர்களுடன் நடிக்கிற மேஜிக் இருக்கிறதே அது சினிமாவில் மட்டும் தான் சாத்தியம்.

காமெடி நடிகர்கள் நாயகர்களாக நடிப்பது நல்ல சமாச்சாரம். இயக்குனர் சிங்கம்புலி, காளிவெங்கட், முனீஷ்காந்த் காமெடியில் மட்டுமின்றி எந்த கேரக்டர்கள் கொடுத்தாலும் சிறப்பாக நடித்து திறமை வெளிப்படுத்துகின்றனர்.

கார்கி படத்தை சமீபத்தில் பார்த்தேன். அதில் காளிவெங்கட் செய்த கேரக்டரில் நடிக்க முடியாமல் போய் விட்டதே என யோசித்தேன். அந்தளவுக்கு அருமையாக நடித்திருந்தார்.

தற்போது பரத் இயக்கத்தில் சாந்தனு நடிக்கும் படத்தில் நடித்து வருகிறேன். ரொமான்ஸ் காமெடியாக உருவாகும் இந்த படம் மக்களிடம் வரவேற்பை பெறும். ஹிந்தி, தெலுங்கு, மலையாளத்தில் சினிமா, வெப் சீரியல்கள் என படங்கள் போய் கொண்டுள்ளது.

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படம் என்னை மக்களிடம் ரீச் செய்தது என்றால் 'சூப்பர்டீலக்ஸ்' படம் தான் எனக்கு பெரிய வாய்ப்புகளையும் தமிழ் சினிமாவில் கதவுகளையும் திறந்து விட்டது.

யாராக இருந்தாலும் நன்றாக நடித்தால் ரசிகர்கள் வரவேற்பை கொடுக்க தான் செய்வர் என்றவர் கண்களை உருட்டி விரித்தபடி 'போதுமா பேட்டி' என முடித்து கொண்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us