ADDED : ஜூன் 20, 2024 02:39 AM

மதுரை:மதுரை காமராஜ் பல்கலையில் சான்றிதழ்கள் வழங்கும் பிரிவு மூடப்பட்டதால் பல்வேறு தேவைக்காக சான்றிதழ்கள் பெற வருவோர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
பல்கலை தேர்வாணையர் அலுவலகத்திற்கு கீழ் செயல்படும் இப்பிரிவில் யு.ஜி., பி.ஜி., ஆய்வு படிப்பு உள்ளிட்ட அனைத்து வகை சான்றிதழ்களும் வழங்கப்படும். இங்கு 25க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். விண்ணப்பிக்கும் அடிப்படையில் இடம் பெயர்வு, உண்மை தன்மை, பட்டச்சான்று உள்ளிட்டவை வழங்கப்படும். இப்பிரிவு திடீரென மூடப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
பல்கலை அலுவலர்கள் கூறுகையில், ''இணைவிப்பு கல்லுாரி மாணவர்களுக்கு 2024 ஏப்ரல் தேர்வு முடிவு தாமதமாகியுள்ளது. தன்னாட்சி கல்லுாரிகளில் மதிப்பெண் சான்று வழங்கும் நிலையில் பல்கலையில் தேர்வு முடிவே வெளியிடவில்லை. இதனால் தேர்வு முடிவை விரைந்து அறிவிப்பதற்காக இப்பிரிவு அலுவலர்கள் மாற்றுப் பணியாக நியமிக்கப்பட்டுள்ளதால் மூடப்பட்டுள்ளது. அவசர பணிக்கு சான்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றனர்.