/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தண்ணீரோ இல்லை... கழிவுநீரோ தொல்லை பசுமலை மக்கள் அவதி தண்ணீரோ இல்லை... கழிவுநீரோ தொல்லை பசுமலை மக்கள் அவதி
தண்ணீரோ இல்லை... கழிவுநீரோ தொல்லை பசுமலை மக்கள் அவதி
தண்ணீரோ இல்லை... கழிவுநீரோ தொல்லை பசுமலை மக்கள் அவதி
தண்ணீரோ இல்லை... கழிவுநீரோ தொல்லை பசுமலை மக்கள் அவதி
ADDED : ஜூன் 18, 2024 06:39 AM

மதுரை, : மதுரை பசுமலை தியாகராஜர் காலனி, கிருஷ்ணாபுரம் காலனியில் தெரு நாய்கள் தொல்லை மட்டுமின்றி, குண்டு, குழி ரோட்டில் மழைநீர் தேங்கி கொசுக்கள் தொல்லையும் அதிகரித்து இருப்பதால் சமாளிக்க முடியாமல் மனஉளைச்சலில் உள்ளனர்.
மதுரை பசுமலை பகுதியில் பெத்தானியநகர், ராயப்பன் நகர், அம்பேத்கர் நகர், அண்ணா நகர், கிருஷ்ணாபுரம் காலனி, ஜோன்ஸ்புரம், செயின்ட் மேரி லைன், பெரக்கா நகர், கண்மாய்க்கரை, மூட்டா காலனி, கோபாலசாமி நகர் தெருக்களில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்கு ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. உணவுக்காக அலைந்து திரியும் போது பொதுமக்களை கடிக்கப் பாய்வதால் ரோட்டில் நடமாட அச்சப்படுகின்றனர். மழைக்காலங்களில் மழைநீர் கழிவுநீருடன் தேங்கி கொசு உற்பத்தியாகும் நிலை உள்ளது.
நாய் தொல்லை அதிகம்
தியாகராஜர் காலனியை சேர்ந்த கனகவல்லி:
பல ஆண்டுகளாக இங்கு நாய்த்தொல்லை உள்ளது. பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இத்தொல்லை தீர்ந்த பாடில்லை.
இங்குள்ள ஒருவரை நாய் கடித்ததால் அவர் ரேபிஸ் பாதிப்புக்குள்ளாகி இறந்தார்.
என்னையும் நாய் துரத்திக் கடித்துள்ளது. இதனால் ரோட்டில் நடக்கவே பயமாக உள்ளது. வாகனங்களில் செல்லும்போதும் நாய்கள் துரத்துவதால் விபத்து நடக்கிறது.
தரமற்ற ரோடுகள்
கிருஷ்ணாபுரம் காலனி முத்துலட்சுமி: மழை நேரங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கி ரோட்டோரம் கழிவுநீருடன் கலப்பதால் நடக்கவே முடியாத அளவு உள்ளது.
தேங்கும் கழிவுநீரில் கொசுக்கள் உருவாகி நோய் தொற்று ஏற்படுகிறது.
ரோடு குறுகலாக இருப்பதால், அதில் எப்படி தார் ஊற்றுவது எனக்கருதிய அதிகாரிகள், கண்துடைப்பாக சிமென்டை பூசிவிட்டனர். பல தெருக்களில் அதுவும் இல்லை. குடிநீர் 2 நாளுக்கு ஒருமுறையே வருகிறது. இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.
கவுன்சிலர் ரவிச்சந்திரன் (தி.மு.க.,) கூறியதாவது:
பத்து ஆண்டுகளாக இப்பகுதியில் பாதாள சாக்கடை வசதி கிடையாது. திறந்தநிலையில் வடிகால் இருந்ததால் தெருக்கள் மோசமாக இருந்தது. இதனை துார்வார எங்களுக்கு 6 மாதங்கள் ஆனது. ஜல் ஜீவன் திட்டத்திற்காக தோண்டிய ரோடுகள் மோசமாக இருந்தன. இதனால் மற்ற ரோடுகளை சீரமைக்கும் பணிகள் தடைபட்டது. பாதாள சாக்கடை குடிநீர் குழாய் பதிப்பு முடிந்த பின் ரோடு அமைக்கும் பணிகள் துவங்கும். தெருக்களில் மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். விளாச்சேரி - தென்கால் கண்மாய் இடையே ரூ.80 லட்சத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் துவங்க உள்ளன. நாய்கள் குறித்து புகார் செய்தாலும், புளூ கிராஸ் அமைப்பினர் அவற்றுக்கு தடுப்பூசி செலுத்தியபின், இதே தெருக்களில் விட்டுச் செல்கின்றனர். பிடிக்கச் சென்றாலும் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அவை தப்பிவிடுகின்றன என்றார்.