/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கடலில் பலியான மீனவருக்கு நிவாரணம் இல்லை; கள்ளச்சாராயம் குடித்தால் தான் தருவீர்களா மீனவர் மனைவி வேதனை கடலில் பலியான மீனவருக்கு நிவாரணம் இல்லை; கள்ளச்சாராயம் குடித்தால் தான் தருவீர்களா மீனவர் மனைவி வேதனை
கடலில் பலியான மீனவருக்கு நிவாரணம் இல்லை; கள்ளச்சாராயம் குடித்தால் தான் தருவீர்களா மீனவர் மனைவி வேதனை
கடலில் பலியான மீனவருக்கு நிவாரணம் இல்லை; கள்ளச்சாராயம் குடித்தால் தான் தருவீர்களா மீனவர் மனைவி வேதனை
கடலில் பலியான மீனவருக்கு நிவாரணம் இல்லை; கள்ளச்சாராயம் குடித்தால் தான் தருவீர்களா மீனவர் மனைவி வேதனை
ADDED : ஜூன் 26, 2024 07:24 AM

ராமேஸ்வரம்: கேரளாவில் கடலில் தவறி விழுந்து பலியான ராமேஸ்வரம் மீனவருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்காமல் கைவிட்ட நிலையில், 'கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் தான் அரசு நிவாரணம் கொடுக்குமா' என அவரது மனைவி கண்ணீர் மல்க கேள்வி எழுப்பினார்.
ராமேஸ்வரம் டி.எஸ்.எம்.நகரில் வசித்தவர் மீனவர் பாண்டி 42. இவருக்கு மனைவி முனீஸ்வரி 38, மகன்கள் சரவணன் 21 (வலிப்பு நோயால் பாதித்தவர்), பிரவீன் 9, மகள்கள் சந்தியா 19, சாருலதா 17, உள்ளனர். முன்பு ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் இருந்து பாண்டி படகில் மீன்பிடிக்க சென்று கொண்டிருந்தார்.
இலங்கை கடற்படை தாக்குதல், சிறைபிடிப்பால் பீதியடைந்த பாண்டி 2023 முதல் கேரள மாநிலம் எர்ணாகுளம் நாரக்கால் தாலுகா முருங்கைமடம் கடற்கரையில் இருந்து சென்று ஆழ்கடல் மீன்பிடித்து வந்தார். இவர் சக மீனவர்களுடன் கேரள கடலில் மீன்பிடித்து விட்டு 2023 செப்.7 ல் முருங்கைமடம் கரை திரும்பினார். அப்போது கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். பின் கேரள போலீஸ் உதவியுடன் உடலை ராமேஸ்வரம் கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.
ஓலை குடிசையில் குடும்பம்
ராமேஸ்வரத்தில் பிய்ந்து போன ஓலைக் குடிசையில் 4 பிள்ளைகளுடன் வசிக்கும் முனீஸ்வரி அன்றாட செலவுக்கும் வழியின்றி தினமும் கூலி வேலைக்கு செல்கிறார். நோயில் பாதித்த மகன் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி கிடக்கிறார். மற்ற பிள்ளைகளின் கல்வி, எதிர்கால வாழ்க்கை கேள்விக் குறியாகிவிடுமோ என தினமும் கண்ணீர் சிந்துகிறார் முனீஸ்வரி.
கடந்த 8 மாதங்களாக முதல்வர் ஸ்டாலின், மீன்துறை அதிகாரிகளிடம் நிவாரணம் கோரி மனு அளித்தும் இதுவரை வரை எந்த பலனும் இல்லை. இறுதியாக மத்திய அரசின் இன்சூரன்ஸ் காப்பீட்டு தொகை ரூ.5 லட்சம் கிடைத்தது.
தமிழக அரசு கைவிரிப்பு
மீனவர் நலவாரியத்தின் ரூ.2 லட்சம், முதல்வர் நிவாரணம் ரூ. 3 லட்சம் கேட்டு முனீஸ்வரி முறையிட்டால், 'பாண்டி கேரளாவில் இறந்ததால் தமிழக அரசு முதல்வர் நிவாரணம், நலவாரிய தொகை தர மீன்துறை சட்டத்தில் இடமில்லை' என அதிகாரிகள் கைவிரித்து விட்டனர்.
முனீஸ்வரி கூறியதாவது:
கேரள கடலில் உயிரிழந்த கூலித் தொழிலாளி குடும்பத்திற்கு நிவாரணம் மறுக்கும் தமிழக அரசு, கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் தான் நிவாரணம் கொடுக்குமா. இந்தியாவில் கேரளா இல்லையா. அங்கு இறந்தால் நிவாரணம் கொடுக்க கூடாதா என்றார்.
கடல் தொழிலாளர் சங்கம் மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில் கூறியதாவது:
வெளி மாநில கடலில் தமிழக மீனவர்கள் இறந்தால் தமிழக அரசு நிவாரணம் வழங்கி வந்த நிலையில் 2022 முதல் இதனை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்தி ஏழை குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க உத்தரவிட வேண்டும் என்றார்.