ADDED : ஜூலை 30, 2024 01:46 AM

திருப்பரங்குன்றம், : மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி சார்பில் மீனாட்சி கார்ப்பரேஷன் நிறுவனர் ராமசாமி நினைவு கோப்பைக்கான கல்லுாரிகளுக்கிடையிலான மாநில கூடைப்பந்து போட்டிகளில் சென்னை வைஷ்ணவா கல்லுாரி அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
நாக் அவுட் முறையில் மூன்று நாட்கள் நடந்த இப்போட்டிகளில் 20 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் சென்னை வைஷ்ணவா கல்லுாரி அணியினர் 65 - 60 புள்ளிகள் வித்தியாசத்தில் கோவை பி.எஸ்.ஜி.சி.ஏ.எஸ்., கல்லுாரி அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றனர். திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரி 3ம் இடம், துாத்துக்குடி வ.உ.சி., கல்லுாரி அணி 4ம் இடம் பிடித்தன. பரிசளிப்பு விழாவிற்கு கல்லுாரி செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். பொருளாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். முதல்வர் சீனிவாசன் வரவேற்றார்.
டாக்டர்கள் கணேசன், அகிலா, ராகேஷ் குமார், சவுராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கவுசல்யா, மானசாதேவி, நந்தினி பரிசு வழங்கினர். சிறந்த வீரர்களாக வைஷ்ணவா கல்லுாரி வீரர் லோகேஷ் குமார் முதல் பரிசு, கோவை பி.எஸ்.ஜி.சி.ஏ.எஸ். கல்லுாரி அணி வீரர் குரு 2ம் பரிசு, திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரி அணி வீரர் ஹரி 3ம் பரிசு, துாத்துக்குடி வ.உ.சி., கல்லுாரி அணி வீரர் ஹரிஷ் 4ம் பரிசு, சவுராஷ்டிரா கல்லுாரி அணி வீரர் கவுதம் 5ம் பரிசு பெற்றனர். கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர் பன்ஷிதர், கீதா, சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் சுஜாதா, பேராசிரியர் பாண்டியராஜன் பங்கேற்றனர்.
ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஸ்வரன் போட்டி ஏற்பாடுகளை செய்தார்.