/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சமுதாய கலாசார அடையாளங்களை அழிக்கும் பரிந்துரைகள்: பிற்படுத்தப்பட்ட சமுதாய கூட்டமைப்பு கருத்து சமுதாய கலாசார அடையாளங்களை அழிக்கும் பரிந்துரைகள்: பிற்படுத்தப்பட்ட சமுதாய கூட்டமைப்பு கருத்து
சமுதாய கலாசார அடையாளங்களை அழிக்கும் பரிந்துரைகள்: பிற்படுத்தப்பட்ட சமுதாய கூட்டமைப்பு கருத்து
சமுதாய கலாசார அடையாளங்களை அழிக்கும் பரிந்துரைகள்: பிற்படுத்தப்பட்ட சமுதாய கூட்டமைப்பு கருத்து
சமுதாய கலாசார அடையாளங்களை அழிக்கும் பரிந்துரைகள்: பிற்படுத்தப்பட்ட சமுதாய கூட்டமைப்பு கருத்து
ADDED : ஜூன் 25, 2024 12:17 AM

மதுரை: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகள் சமுதாய, கலாசார அடையாளங்களை அழிக்க நினைப்பதாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் கருத்து தெரிவித்தனர்.
மதுரையில் இக்கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விளக்கக் கூட்டம் நடந்தது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குதல், மத்திய அரசுப் பணிகள், கல்வி நிலையங்களில் வழங்கப்பட்டுள்ள 27% இடஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 9% இடங்களை நிரப்புதல், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டில் ஓ.பி.சி., பிரிவு மக்களையும் உள்ளடக்குதல், மாநில கல்வி உதவித்தொகை உச்சவரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்துதல், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி கல்விக் கடன்களை ரத்து செய்தல், வன்கொடுமை தடுப்புச் சட்ட துஷ்பிரயோகம், கலாசார அடையாளங்களை பறிக்கும் நடவடிக்கைகளை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தலைவர் ரத்தின சபாபதி பேசியதாவது:
தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட சமூகங்களை ஓ.பி.சி., யில் உள்ளடக்கி இடஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்துவிட்டனர். கடந்த 32 ஆண்டுகளாக ஓ.பி.சி.,க்கான இடஒதுக்கீடு முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளது. பொதுப்பிரிவில் இருந்து 10 சதவீதத்தை முன்னேறிய ஜாதிக்கு வழங்கியுள்ளதால் ஓ.பி.சி., பிரிவினர் பாதிப்படைகின்றனர்.
மாநில அரசில் இடஒதுக்கீடு இருந்தும் பயனில்லை, மத்திய அரசில் கொடுக்கப்பட்ட இடஒதுக்கீடும் முறையாக நிரப்பப்படவில்லை. ஓ.பி.சி., பிரிவினர் 20 சதவீதம் மட்டுமே மத்திய அரசுப் பணிகளில் உள்ளனர். கம்யூனிஸ்ட், காங்கிரஸ் போன்ற கட்சிகளும் பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பிற்கான இடஒதுக்கீட்டை ஆதரித்தனர்.
முன்னாள் நீதிபதி சந்துரு கமிட்டியின் பரிந்துரைகள் அபத்தமாக உள்ளது. எங்கோ ஒரு இடத்தில் நடந்த நிகழ்வால், அனைத்து பள்ளி கல்லுாரிகளின் சமுதாய பெயர்களை நீக்குவது சரியல்ல.
பெரும்பாலான சமுதாயத்தினர் வாழும் பகுதிகளில் அச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை கல்வி அலுவலர்களாகவோ, தலைமை ஆசிரியராகவோ நியமிக்கக் கூடாது, மாணவர்கள் நெற்றியில் திலகமிடக் கூடாது போன்ற கருத்துகள் பிரச்னைகளை மோசமாக்குமே தவிர தீர்க்காது. இத்தகைய பரிந்துரைகள் சமுதாய, கலாசார அடையாளங்களை அழிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டது. இவற்றை தமிழக அரசு ஏற்கும் பட்சத்தில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம் என்றார்.
கூட்டத்தில் யாதவர் பேரமைப்பு நிர்வாகிகள் நவநீத கிருஷ்ணன், வேலுச்சாமி யாதவ், ஒக்கலிகார் சங்க நிர்வாகி வெள்ளியங்கிரி, வீரசைவர் பேரவைத் தலைவர் நாகரத்தினம், முத்தரையர் பேரவைத் தலைவர் சரவண தேவா, மாநில மருத்துவர் சமூக சங்க நிர்வாகி ராஜேந்திரன், மறவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் விஜயகுமார், சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை நாயுடு சமூக பிரதிநிதி செல்லபாண்டியன், முன்னாள் ஏ.டி.எஸ்.பி., குமரவேல் ஒருங்கிணைத்தனர்.