/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பொதுப்பணித்துறைக்கும், மாநகராட்சிக்கும் நகரின் 3 கால்வாய் உரிமை விவகாரத்தில் 'வாய்க்கா தகராறு' பொதுப்பணித்துறைக்கும், மாநகராட்சிக்கும் நகரின் 3 கால்வாய் உரிமை விவகாரத்தில் 'வாய்க்கா தகராறு'
பொதுப்பணித்துறைக்கும், மாநகராட்சிக்கும் நகரின் 3 கால்வாய் உரிமை விவகாரத்தில் 'வாய்க்கா தகராறு'
பொதுப்பணித்துறைக்கும், மாநகராட்சிக்கும் நகரின் 3 கால்வாய் உரிமை விவகாரத்தில் 'வாய்க்கா தகராறு'
பொதுப்பணித்துறைக்கும், மாநகராட்சிக்கும் நகரின் 3 கால்வாய் உரிமை விவகாரத்தில் 'வாய்க்கா தகராறு'
ADDED : ஜூன் 21, 2024 04:45 AM

மதுரை: மதுரை நகரில் கிருதுமால், சிந்தாமணி, வண்டியூர் பிரதான கால்வாய்களின் எல்லைகள், பராமரிப்பு உரிமையை ஒப்படைக்குமாறு பொதுப்பணித்துறையிடம் மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.
நகரில் இம்மூன்று உட்பட 16 கால்வாய்கள் உள்ளன. மழைக் காலங்களில் நகருக்குள் மழைநீர் தேங்குவதை தடுக்க இக்கால்வாய்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. தற்போது இவை கழிவுநீர் தேங்கும் இடமாகவும், கொசுக்கள் உற்பத்தி மையங்களாகவும் காட்சியளிக்கின்றன.
நகர் பகுதி குப்பை, கழிவுநீர் சேர்வதால் கால்வாய்களை மாநகராட்சி பராமரிக்க வேண்டும் என பொதுப்பணித் துறையும், அவற்றின் உரிமை பொதுப்பணித்துறைக்கு உள்ளதால் அவற்றை துார்வாருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் மாநகராட்சியும் உள்ளது. இதனால் இக்கால்வாய்களின் பயனின்றி சாக்கடையாக மாறி வருகின்றன. இந்நிலையில் இவற்றின் எல்லை, பராமரிப்பு உரிமையை மாநகராட்சியிடம் ஒப்படைக்குமாறு பொதுப் பணித்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: நகரில் சுகாதாரம் பராமரிப்பு மாநகராட்சி வசம் உள்ளது. சுகாதாரம் தொடர்பான பெரும்பாலான புகார்கள் இக்கால்வாய்கள் தொடர்பாகவே வருகின்றன. மழைக்காலத்தில் கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்தால் அது குடியிருப்பு பகுதிக்குள் சென்று பிரச்னையாகிறது. துார்வாரக்கோரி மாநகராட்சி வலியுறுத்தினாலும் அத்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதன் முழு பாதிப்புக்கும் மாநகராட்சி தான் பொறுப்பேற்க வேண்டியுள்ளது.
ஆனால் மாநகராட்சி வசம் கால்வாய்கள் இல்லாததால் மாநில அரசிடம் எவ்வித சிறப்பு நிதி பெற்று துார்வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதேநேரம் இக்கால்வாய்களுக்கான பாசன ஆயக்கட்டுகள் இல்லாததால் பொதுப்பணித்துறையும் கால்வாய்களை துார்வாருவதை கண்டுகொள்வதில்லை. இதனால் அவற்றை துார்வார பொதுப்பணித்துறையிடம் ஒவ்வொரு முறையும் என்.ஓ.சி., பெறுவது சிரமமாக உள்ளது. இதனால் தான் நகருக்குள் அமைந்துள்ள கால்வாய்கள் எல்லை, பராமரிப்பு உரிமையை மாநகராட்சிக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். அப்போது தான் மாநில அரசிடம் நிதிபெற்று பாராமரிக்க முடியும் என்றனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் மாநகராட்சி கேட்டுக்கொண்டால் அதற்கான என்.ஓ.சி., மட்டுமே கொடுக்க முடியும். ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு கால்வாய் எல்லை உரிமையை வழங்குவது என்பது அத்துறைகளுக்குள் முடிவு எடுக்க முடியாது. அரசு முடிவு எடுக்க வேண்டும். மாநில அரசிடம் மாநகராட்சி உரிய முறையில் முறையிடலாம் என்றனர்.