விபத்தில் பெண் பலி
மேலுார்: மதுரை ஜெய்ஹிந்த்புரம் சித்திக் 60, சைக்கிள் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை தன்னுடைய மனைவி ஆமீனாபேகத்துடன் 54, துவரங்குறிச்சியில் உறவினர் திருமணத்தில் கலந்து கொண்டவர் டூ வீலரில் மதுரைக்கு திரும்பினார். ஹெல்மெட் அணியவில்லை. மேலுார், மலம்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்ற போது நாய் குறுக்கே வரவே சித்திக் பிரேக் போட்டார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஆமீனா பேகம் இறந்தார். மேலுார் இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு விசாரிக்கிறார்.
கஞ்சா விற்ற 3 பேர் கைது
அவனியாபுரம்: எஸ்.ஐ., அருண் அயன்பாப்பாக்குடி பகுதியில் ரோந்து சென்றார். அங்கு சிலர் ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்ததால் ஆட்டோ, கஞ்சாவை பறிமுதல் செய்தார். பெருங்குடி இந்திராநகர் தங்கபாண்டி 39, அவனியாபுரம் சிவபாண்டி 32 ஆகியோரை கைது செய்து விசாரிக்கிறார்.
ரவுடிகள் உட்பட 4 பேர் கைது
மதுரை: மதிச்சியம் போலீஸ் எஸ்.ஐ., ராஜகோபால் ஓபுளாபடித்துறை அருகே ரோந்து சென்றபோது வைகை வடகரையில் முட்புதருக்குள் பதுங்கி இருந்த இளைஞரை பிடித்தார். அவரிடம் அரிவாள் இருந்தது. விசாரணையில் அவர் புளியந்தோப்பு கார்த்திக் 29 என்பதும், அவர் மீது கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரிந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.
மாணவர் தற்கொலை
மதுரை: தத்தனேரியை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர், தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு சேர்ந்திருந்தார். மனவருத்தத்தில் இருந்த அவர் வீடு அருகே இருந்த மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.