மாடு முட்டி ஒருவர் பலி
கொட்டாம்பட்டி: பா.களப்பாறையைச் சேர்ந்தவர் குமார் 41, ஈரோட்டில் தனியார் கல்லுாரி விடுதி சமையல் மாஸ்டர். உறவினர் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு டூ வீலரில் சென்ற போது, மாடு முட்டியதில் நேற்று மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ் மோதி காவலாளி பலி
திருமங்கலம்: கப்பலுார் சிட்கோவில் தனியார் ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. செங்குளம் தாளமுத்து 71, இங்கு காவலாளியாக பணியாற்றினார். நேற்று காலை 8:45 மணிக்கு ஊழியர்களை அழைத்துவர அந்நிறுவன பஸ் வெளியில் கிளம்பியது. அதற்கு கேட்டை திறந்து வைத்தார் தாளமுத்து. நிறுவனத்தில் இருந்து கிளம்பிய பஸ்சில் திடீரென பிரேக் பிடிக்காததால் தாளமுத்து மீது பஸ் மோதியது. சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தனக்கன்குளம் டிரைவர் சகாயமுத்தையாவை 36, திருமங்கலம் நகர் போலீசார் கைது செய்தனர்.
மெட்ரிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருமங்கலம்: மறவன்குளம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிக்கு, மதுரை ரோட்டில் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியும் உள்ளது. விடுமுறை நாளான நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு பள்ளி முதல்வர் பள்ளி இ-மெயிலை பார்வையிட்டார். அதில் அலெர்ட் என்ற தலைப்பில் வந்த இ மெயிலை பார்த்தபோது, மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டும், மாணவர்கள் ஆசிரியர்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.