Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மருந்துச்சீட்டு இல்லாமல் மாத்திரை கொடுக்கக் கூடாது போலீஸ் கமிஷனர் லோகநாதன் எச்சரிக்கை

மருந்துச்சீட்டு இல்லாமல் மாத்திரை கொடுக்கக் கூடாது போலீஸ் கமிஷனர் லோகநாதன் எச்சரிக்கை

மருந்துச்சீட்டு இல்லாமல் மாத்திரை கொடுக்கக் கூடாது போலீஸ் கமிஷனர் லோகநாதன் எச்சரிக்கை

மருந்துச்சீட்டு இல்லாமல் மாத்திரை கொடுக்கக் கூடாது போலீஸ் கமிஷனர் லோகநாதன் எச்சரிக்கை

ADDED : ஜூலை 05, 2024 05:13 AM


Google News
மதுரை: 'மருந்துச் சீட்டு இல்லாமல் எந்தவித மாத்திரைகளையும் கொடுக்கக் கூடாது' என போலீஸ் கமிஷனர் லோகநாதன் மருந்து கடை உரிமையாளர்களை எச்சரித்தார்.

மதுரையில் போலீசார் சார்பில் மருந்து நிறுவனம், கடைகள், கூரியர், பார்சல் சேவை நிறுவனங்களுடனான போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸில் நடந்தது.

போலீஸ் கமிஷனர் லோகநாதன் பேசியதாவது:

மதுரையில் ஜூன் 30 வரை கடந்த நான்காண்டுகளில் 2068 குட்கா வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 2174 பேர் மீது வழக்கு பதியப்பட்டு 2171 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்து 274 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதன் மதிப்பு ரூ.1.05 கோடி. 43 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதை மாத்திரைகள் சம்பந்தமாக 18 வழக்குகள் பதியப்பட்டு, 19 ஆயிரத்து 754 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 31 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு குழுக்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.

மருந்து கடை உரிமையாளர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பில் முக்கிய பொறுப்பு உள்ளது. மருந்துச் சீட்டு இல்லாமல் எந்தவித மாத்திரைகளையும் கொடுக்கக் கூடாது. டாக்டர்கள் பரிந்துரைக்கும் நாட்களுக்கு மேல் மருந்து வழங்கக் கூடாது. இதுகுறித்து அறிவிப்பு பலகையை ஒவ்வொரு மருந்து கடைகளிலும் வைக்க வேண்டும்.

டாக்டர்கள், நோயாளிகள், மருந்து வாங்குபவர்களின் விபரங்களை பதிவு செய்வது அவசியம். மருந்துகள் நோயாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யப்படுவதன் மூலம் மாற்று வழிகளில் மருந்துகள் செல்வதை தடுக்க முடியும். அனைத்து மருந்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பெருத்தப்பட வேண்டும். குற்றத்தை தடுக்கவும் கண்டுபிடிக்கவும் அவை உதவும்.

கூரியர், பார்சல் சேவை நிறுவனங்கள், பார்சல்களின் முகவரியில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, சந்தேகத்திற்குரிய மருந்துகள் இருப்பதாக உணர்ந்தாலோ உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து மருந்து பார்சல்கள் வந்தால் போலீசார் அல்லது மருந்து கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

துணை கமிஷனர்கள் கருண் கராட், குமார், மதுகுமாரி, அரசு மருத்துவமனை நரம்பியல் டாக்டர் வெங்கடேஸ்வரன், மருந்து உதவி இயக்குனர் செல்வக்குமார், தலைமை சுகாதார அதிகாரி வினோத், உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராம் பாண்டியன், மாவட்ட மருந்து வணிகர் சங்க முதன்மை செயலாளர் பிச்சைமணி, மாவட்ட வணிகர் சங்க உதவி தலைவர் பழனியப்பன், தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us