ADDED : ஜூலை 10, 2024 04:45 AM
டி.கல்லுப்பட்டி, : டி.கல்லுப்பட்டி வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை திட்ட நிதியின் கீழ், புளியம்பட்டியில் பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சி நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் விமலா தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.
தொழில்நுட்ப மேலாளர் ஹேமலதா வரவேற்றார். ஓய்வு வேளாண் அலுவலர் குணசேகரன் உயிர் உரங்களான டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ் கொண்டு விதைநேர்த்தி செய்தல், டி.ஏ.பி., கரைசல் தெளித்து எளிய முறையில் அதிக மகசூல் பெறலாம்.
பாசிப்பயறு, உளுந்து பயிர்களை தாக்கும் காய் துளைப்பான் புழுக்களை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி ஏக்கருக்கு 4 வீதம் வைத்து கட்டுப்படுத்தலாம்.
அல்லது பறவை தாங்கியை ஏக்கருக்கு 20 வீதம் வைத்தும் கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு விளக்கினார். வேளாண் அலுவலர் சரவணகுமார், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் பற்றியும், வேளாண் மானிய திட்டங்கள் குறித்தும் பேசினார்.
உதவி வேளாண் அலுவலர் கண்ணன், உதவி தொழில்நுட்பட மேலாளர் ஜெகன்பாண்டி உட்பட பலர் பேசினர். உதவி தொழில்நுட்ப மேலாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.