/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தமிழையும், நீதியையும் பிரிக்க முடியாது நீதி வாழ்ந்த இடம் மதுரை என நீதிபதி புகழாரம் தமிழையும், நீதியையும் பிரிக்க முடியாது நீதி வாழ்ந்த இடம் மதுரை என நீதிபதி புகழாரம்
தமிழையும், நீதியையும் பிரிக்க முடியாது நீதி வாழ்ந்த இடம் மதுரை என நீதிபதி புகழாரம்
தமிழையும், நீதியையும் பிரிக்க முடியாது நீதி வாழ்ந்த இடம் மதுரை என நீதிபதி புகழாரம்
தமிழையும், நீதியையும் பிரிக்க முடியாது நீதி வாழ்ந்த இடம் மதுரை என நீதிபதி புகழாரம்
ADDED : ஜூன் 23, 2024 04:14 AM

மதுரை:' ''தமிழையும், நீதியையும் பிரிக்க முடியாது. நீதி இன்றி தமிழில் எந்த இலக்கிய படைப்பும் இல்லை'' என உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசினார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை 'மகா' வழக்கறிஞர்கள் சங்கத்தின் 25வது ஆண்டு வெள்ளிவிழா துவக்க விழா நடந்தது. தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் வீ.எஸ்.கார்த்தி வரவேற்றார். உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது: தமிழையும், நீதியையும் பிரிக்க முடியாது. நீதி இன்றி தமிழில் எந்த இலக்கிய படைப்பும் இல்லை. சிலப்பதிகாரத்தில் கண்ணகி நீதி கேட்பார். எந்தளவிற்கு அப்போது நீதி இருந்தது என்பதற்கு சான்று அது.
சென்னை, மதுரை இடையே வேறுபாடு உள்ளது. அனைவரும் பிழைக்க வந்த இடம் சென்னை. மதுரை அப்படி அல்ல. அது நீதி வாழ்ந்த இடம். வழக்கறிஞர்களின் வாதத்தில் அந்த உணர்ச்சி இருக்கும். தொழிலில் தொழில் தர்மம் தேவை. தர்மம் செய்யும்போது பலன்களை எதிர்பார்க்கக்கூடாது. உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 20 வது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாட தலைமை நீதிபதியிடம் பேச உள்ளேன். மதுரை வழக்கறிஞர்களிடம் திறமை உள்ளது.
இனி வரும் காலங்களில் அவர்கள் நீதிபதிகள் தேர்வு பட்டியலில் அதிகம் இடம்பெறுவர். இன்னும் 5 ஆண்டுகளில் இங்குள்ள நீதிபதிகளைக் கொண்டு இக்கிளை செயல்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை என்ற பெயர் மாற்றப்பட வேண்டும் என எனது தனிப்பட்ட கண்ணோட்டத்தில் கூறுகிறேன். அது சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கும். அரசின் செயல்பாடு நன்றாக இருக்கும்பட்சத்தில் ரிட் வழக்குகள் குறையும் என்றார்.
மதுரைக் கிளை நிர்வாக நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசியதாவது: சென்னை உயர்நீதிமன்றத்தில் 60 சதவீதம், மதுரைக் கிளையில் 40 சதவீதம் நீதிபரிபாலனம் சிறப்பாக செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் இவ்விரு நீதிமன்றங்கள் அதிக வழக்குகளை பைசல் செய்து சாதனை படைத்துள்ளன. 'மகா' சங்கம் துவக்கப்பட்ட பின் நீதிமன்ற புறக்கணிப்பு குறைந்துள்ளது என்றார்.
தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பேசியதாவது: தமிழை வழக்காடு மொழியாக்குவதில் ஆங்கிலத்திலுள்ள சட்ட சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் இல்லை. இதனால் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்காக பார் கவுன்சில் சார்பில் தனி செயலி (ஆப்) துவக்கப்படும். ஒவ்வொரு வழக்கறிஞரும் 10 ஆங்கில சொற்களுக்கு தமிழில் சொற்களை அனுப்பினால் சொல் அகராதி (டிக்ஸ்னரி) வெளியிடப்படும். குற்றவியல் சட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது ஜூலை முதல் அமலாகிறது. அதற்கேற்ப பயிற்சி அளிக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.
உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, பி.என்.பிரகாஷ், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன், சங்க பொருளாளர் என்.எஸ்.கார்த்திகேயன், ஆலோசனைக் குழுத் தலைவர் தியாகராஜன் பங்கேற்றனர். வழக்கறிஞர் பணியில் பொன்விழா கண்டவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன் நன்றி கூறினார்.