/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விடுதிகளுக்கு ஒருங்கிணைந்த சமையல் கூடம் விடுதிகளுக்கு ஒருங்கிணைந்த சமையல் கூடம்
விடுதிகளுக்கு ஒருங்கிணைந்த சமையல் கூடம்
விடுதிகளுக்கு ஒருங்கிணைந்த சமையல் கூடம்
விடுதிகளுக்கு ஒருங்கிணைந்த சமையல் கூடம்
ADDED : ஜூலை 28, 2024 07:03 AM
மதுரை : 'ஒருங்கிணைந்த சமையல் கூடம் திட்டம் மூலம் உணவு தயாரித்து விடுதி மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும்,' என தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்க மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. நிறுவன தலைவர் சகாதேவன் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது:
பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் 484 காப்பாளர், 1152 சமையலர், காவலர் பணியிடங்களை தமிழக அரசு நிரப்பவில்லை. காப்பாளர் பணியில் சேர்ந்தவர்கள் பதவி உயர்வு இன்றி ஓய்வு பெறுகின்றனர். இதர துறைகளில் அந்நிலை இல்லை. காப்பாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
சென்னை, திருச்சி, மதுரையிலுள்ள விடுதிகளுக்கு ஒருங்கிணைந்த சமையல் கூடம் திட்டத்தை தனியார் மூலம் செயல்படுத்த தமிழக அரசு 2022 ல் அறிவித்தது. ஒரு விடுதிக்கு ஒரு சமையலர் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தால் விடுதி பணியாளர்களின் பணி பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது விடுதிகளில் வித்தியாசமான உணவு வகைகளை மாணவர்களுக்கு வழங்குகிறோம். தனியார் மூலம் 3 வேளைக்கும் அரிசி உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விடுதி நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படும். தரமற்ற உணவு மூலம் மாணவர்களின் உடல், மனநலம் பாதிக்க வாய்ப்புள்ளது. இத்திட்டத்தை கைவிட வேண்டும்.
சிறைக் கைதிகளின் உணவிற்கு தலா ரூ.135 ஐ அரசு செலவிடுகிறது. எதிர்கால மாணவர்களுக்கு தலா ரூ.45 செலவிடுகிறது. பணியின்போது மரணமடைந்த விடுதி காப்பாளர், சமையலர், காவலர்களுக்கு அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கருணைப் பணி நியமனம் வழங்க வேண்டும்.
விடுதிகளுக்கான மளிகை பொருட்கள், காய்கறிகளை பொருட்கள் இல்லாத கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்ய நிர்பந்திக்கப்படுகிறது. நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
விடுதிகளுக்குரிய மின் கட்டணத்தை காப்பாளர்கள் சம்பளத்திலிருந்து செலுத்திவிட்டு, பல மாதங்களுக்கு பின் அரசிடமிருந்து பெற வேண்டியுள்ளது. பிற்பட்டோர் நல அலுவலகத்திலிருந்து மின் கட்டணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நிர்வாகிகள் முருகேசன், மணிமொழி, வேல்முருகன், நாராயணசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் செல்வம் பங்கேற்றனர்.