ADDED : ஜூன் 07, 2024 06:22 AM

உசிலம்பட்டி,: மின்சாரம் தாக்கி காயமடைந்த பணியாளர் கொடுத்த புகாரில் மின்துறை பணியாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்து, மின் ஊழியர்கள் உசிலம்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
டி.ராமநாதபுரம் துணைமின் நிலையத்தில் பணிபுரிபவர் கேங்மேன் பாண்டி 35. இவர் மே 16 ல், விட்டல்பட்டி பகுதியில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டார். ஒயர்மேன் கோபால், மின்பாதை ஆய்வாளர் ஜெயக்கொடி ஆகியோர் அந்த லைனில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறியதால், பாண்டி மின்கம்பத்தில் ஏறினார்.
ஆனால் அந்த லைனில் மின்சாரம் வந்ததால் துாக்கி வீசப்பட்டதில் காயமடைந்தார். பணியில் கவனக்குறைவாக இருந்த கோபால், ஜெயக்கொடி மீது சாப்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனைக் கண்டித்தும், துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மின்வாரிய தொழிற் சங்கத்தினர் நேற்று பணிகளை புறக்கணித்தனர். செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் செயற்பொறியாளர் வெங்கடேஷ்வரன் உட்பட பொறியாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். துறை ரீதியான நடவடிக்கை குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் பேசி வழக்கை மறு பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி சமாதானம் செய்தனர்.