குன்றத்து கோயிலில் குவிந்த பக்தர்கள்
குன்றத்து கோயிலில் குவிந்த பக்தர்கள்
குன்றத்து கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜூலை 22, 2024 05:17 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிப் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இரண்டரை மணி நேரம் காத்திருப்பு
பக்தர்கள் கூட்டம் குறைவாக இருக்கும் சமயங்களில் மூலஸ்தானத்தில் கட்டண தரிசன பக்தர்கள் ஒரு வரிசையிலும், கட்டணமில்லா தரிசன பக்தர்கள் மற்றொரு வரிசையிலும் அனுப்பப்படுவர். கூட்டம் அதிகம் உள்ள காலங்களில் மூலஸ்தானத்தில் இலவச தரிசன பக்தர்கள் மூன்று வரிசையாக அனுப்பப்படுகின்றனர்.
நேற்று ஆடி பவுர்ணமி, ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் திரண்டது.
இலவசம் மற்றும் கட்டண தரிசன பக்தர்கள் தலா இரண்டு வரிசைகளில் அனுப்பப்பட்டனர். இதனால் இலவச தரிசன பக்தர்கள் இரண்டரை மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வழக்கமாக கோயில் நடை மதியம் ஒரு மணிக்கு சாத்தப்படும். நேற்று பக்தர்கள் கூட்டத்தால் கோயில் ராஜகோபுரத்தின்கீழ் உள்ள பெரிய கதவுகள் இரண்டு மணிக்கு சாத்தப்பட்டது.
கோயிலுக்குள் இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் முடித்து இரண்டே முக்கால் மணியளவில் வெளியில் வந்தனர். பின்பு மாலை 4:00 மணிக்கு வழக்கம் போல் கோயில் நடை திறக்கப்பட்டது.