வாகனங்களை பதம் பார்க்கும் பள்ளங்கள்
வாகனங்களை பதம் பார்க்கும் பள்ளங்கள்
வாகனங்களை பதம் பார்க்கும் பள்ளங்கள்
ADDED : ஜூன் 18, 2024 07:02 AM

மதுரை, : மதுரையின் போக்குவரத்து மிகுந்த புதுஜெயில் ரோட்டில் பள்ளங்களால் வாகனங்கள் சீராக செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது.
மதுரை அரசரடி சந்திப்பு முதல் சிம்மக்கல் செல்லும் புதுஜெயில் ரோட்டில் வாகனங்களை பாதிக்கும் பள்ளங்கள் அதிகமுள்ளன. ஜெயில் வரை பாதிப்பில்லாத ரோடு, கிரம்மர்புரம் பகுதிக்கு வந்ததும் பல பள்ளங்கள் உள்ளன.
பெரிது, பெரிதாக உள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. விரைந்து வரும் வாகனங்கள் அருகே வந்ததும் பள்ளத்தில் விழுந்து எழுந்து செல்வதால் மற்ற வாகனங்களின் இயக்கம் பாதிக்கிறது.
இந்த ரோட்டில் ஆரப்பாளையம் பிரிவு பகுதியில் அகலமான பெரும் பள்ளம் உள்ளது. அருகிலேயே கடைகள், அங்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் ரோடு ஆட்டோ செல்லும் அளவு குறுகிவிடுகிறது.
அதனை கடந்து செல்லும் வாகனங்கள் அழகரடி வரை தட்டுத்தடுமாறியே செல்கின்றன.
பல மாதங்களாக அல்ல... ஆண்டுக்கணக்கில் இந்த அவலம் தொடர்வதால் இந்த ரோட்டில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதடைகின்றன. நகரின் முக்கிய பகுதியில், அதிக போக்குவரத்து உள்ள இந்த ரோட்டை நெடுஞ்சாலைத் துறை ஏனோ இதுவரை கண்டு கொள்ளவில்லை.
மதுரை நகரில் பல பகுதிகளில், சிறிய ரோடுகூட சீர்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ரோடுக்கு ஏனோ இதுவரை விமோசனம் கிடைக்கவில்லை.
நெடுஞ்சாலைத் துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.