/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வாய் ஜாக்கிரதை: பள்ளி, கல்லுாரி மாணவர்களை பாழாக்கும் 'கூல் லிப்': போதையின் பாதையில் போனால் புற்றுநோய் வரும் வாய் ஜாக்கிரதை: பள்ளி, கல்லுாரி மாணவர்களை பாழாக்கும் 'கூல் லிப்': போதையின் பாதையில் போனால் புற்றுநோய் வரும்
வாய் ஜாக்கிரதை: பள்ளி, கல்லுாரி மாணவர்களை பாழாக்கும் 'கூல் லிப்': போதையின் பாதையில் போனால் புற்றுநோய் வரும்
வாய் ஜாக்கிரதை: பள்ளி, கல்லுாரி மாணவர்களை பாழாக்கும் 'கூல் லிப்': போதையின் பாதையில் போனால் புற்றுநோய் வரும்
வாய் ஜாக்கிரதை: பள்ளி, கல்லுாரி மாணவர்களை பாழாக்கும் 'கூல் லிப்': போதையின் பாதையில் போனால் புற்றுநோய் வரும்
UPDATED : ஜூன் 20, 2024 06:09 AM
ADDED : ஜூன் 20, 2024 05:04 AM

மதுரை: மதுரையில் பள்ளி, கல்லுாரி மாணவர்களை அடிமையாக்கும் 'கூல் லிப்' எனப்படும் புகையில்லா புகையிலை பொருட்கள் கடந்த 7 மாதங்களில் மட்டும் 80 கிலோ அளவுக்கு கைப்பற்றப்பட்டுள்ளது. மாணவர்கள் தொடர்ந்து இதை பயன்படுத்தினால் வாய் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கடந்த நவம்பர் முதல் உணவுப் பாதுகாப்புத்துறையுடன் போலீசாரும் இணைந்து மதுரை மாவட்டத்தில் உள்ள கடைகளில் தொடர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில் 1434 கிலோ அளவுக்கு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: போலீசாருடன் இணைந்து 19 அலுவலர்கள் மூலம் குழுக்கள் அமைத்து 10,832 கடைகளை ஆய்வு செய்துள்ளோம். இதில் ரூ.13.23 லட்சம் மதிப்புள்ள 1434 கிலோ புகையிலை பொருட்களை கைப்பற்றினோம். இதில் பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் 'கூல் லிப்' புகையிலை 80 கிலோ அளவு கைப்பற்றினோம். பள்ளி, கல்லுாரிகளைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவிற்குள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கக்கூடாது. அப்படி விற்பவர்களுக்கான அபராதத்தை ஜனவரியில் 5 மடங்காக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை 352 கடைகள் மூடப்பட்டு ரூ.38.50 லட்சம் அபராதம் விதித்துள்ளோம். 15 நாட்களுக்கு ஒருமுறை, கலெக்டர், சுகாதாரத்துறை செயலருடன் ஆய்வு நடத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என்றார். கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்றால் 94440 42322 க்கு புகார் செய்யலாம்.
புகையில்லாத போதை பொருட்களால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்கிறார் மாவட்ட மனநல திட்ட அலுவலர் டாக்டர் சந்தோஷ்ராஜ்.
அவர் கூறியதாவது: பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிறிய உறைக்குள் வைக்கப்பட்டுள்ள புகையிலையை (கூல் லிப்) விரும்பி சுவைக்கின்றனர். இந்த புகையிலை உறையை கீழ்ப்பக்க உதடுக்குள் அல்லது பக்கவாட்டு ஈறுப்பகுதிக்குள் மறைத்து வைக்கின்றனர். உமிழ்நீர் சுரக்கும் போது புகையிலை நனைந்து அதன் சாற்றை உறிஞ்சுகின்றனர். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் ஈறு நோய்கள் வரலாம். பற்சிதைவு, பல் இழப்பு ஏற்படும். வாய் உட்பகுதியில் வெள்ளை அல்லது சாம்பல நிற படிவம் உருவாகி நாளடைவில் கவனிக்காமல் விடும் பட்சத்தில் புற்றுநோயாகி மாறி விடும்.
'கூல் லிப்' பயன்படுத்தும் மாணவர்களுக்கு படிப்பில் கவனம் சிதறும், அடிக்கடி மனநிலை மாறும், திடீர் கோபம் வரும். புகையிலையைச் சார்ந்து வாழ்வர். இவர்களை பெற்றோர்களும், ஆசிரியர்களும் அடையாளம் கண்டு கவுன்சிலிங்கிற்கு அழைத்து வர வேண்டும். ஆரம்பத்திலேயே இப்பிரச்னையை சரிசெய்யாவிட்டால் வளரும் போது வேறுவித போதை பழக்கத்திற்கு செல்ல ஆரம்பிப்பர் என்றார்.