Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரத்தசோகைக்கான இயற்கை நல பெட்டகம் திட்டம் என்னாச்சு

ரத்தசோகைக்கான இயற்கை நல பெட்டகம் திட்டம் என்னாச்சு

ரத்தசோகைக்கான இயற்கை நல பெட்டகம் திட்டம் என்னாச்சு

ரத்தசோகைக்கான இயற்கை நல பெட்டகம் திட்டம் என்னாச்சு

ADDED : ஆக 02, 2024 05:06 AM


Google News
Latest Tamil News
மதுரை: ரத்தசோகையால் பாதிக்கப்படும் வளரிளம் பெண்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வந்த இயற்கை நல பெட்டகம் ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக பள்ளி மாணவிகள் ரத்தசோகையால் பாதிப்புக்குள்ளாவது தொடர்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது படிப்பில் கவனமின்மை, உடல் அசதி, சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

பெண்கள் கருவுற்றால் பிறக்கும் குழந்தைக்கு உடல்ரீதியான பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதைத் தவிர்க்கும் வகையில் 2021 ம் ஆண்டு இந்திய மருத்துவத் துறையின் கீழ் அம்மா இயற்கை நல பெட்டகம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் உள்ள யோகா மற்றும் இயற்கை நல்வாழ்வு துறை மற்றும் நல்வாழ்வு மையங்களில் இந்த பெட்டகம் வளரிளம் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. 12 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருந்தால் பரிசோதனை முடிவுகளை காண்பிக்க வேண்டும். ரத்தசோகை உறுதி செய்யப்பட்டவர்களுக்கு கறிவேப்பிலை, நெல்லிக்காய், முருங்கை இலைப்பொடி தலா 100 கிராம், தேன் 100 மில்லி அடங்கிய பெட்டகம் இலவசமாக வழங்கப்பட்டது. ஆதார் அடையாள அட்டை நகலை கொடுத்து ஆண்டுக்கு 3 முறை இந்த பெட்டகத்தை வாங்கி பெண்கள் பயன்பெற்றனர்.

உணவே மருந்து என்பதன் அடிப்படையில் கறிவேப்பிலை, முருங்கை இலைப் பொடியை சாதத்தில் கலந்து சாப்பிடுவது அல்லது 'சூப்' ஆக குடிப்பதன் மூலம் ரத்தசோகை பாதிப்புக்குள்ளான பெண்களின் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்தது. இதுபோலவே தேனும் நெல்லிக்காய் பொடியும் பயன்படுத்தினர். இத்திட்டம் நிறுத்தப்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள யோகா மற்றும் இயற்கை நல்வாழ்வு துறையிலும், சில ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த பெட்டகம் வழங்கப்படவில்லை.

மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்று இந்த திட்டத்தையும் தொடர்ந்தால் ரத்தசோகையில் இருந்து வளரிளம் பெண்கள் மீட்கப்படுவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us