Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நெடுங்கல் தடுப்பணை பகுதியை சுற்றுலா தலமாக்க வேண்டுகோள்

நெடுங்கல் தடுப்பணை பகுதியை சுற்றுலா தலமாக்க வேண்டுகோள்

நெடுங்கல் தடுப்பணை பகுதியை சுற்றுலா தலமாக்க வேண்டுகோள்

நெடுங்கல் தடுப்பணை பகுதியை சுற்றுலா தலமாக்க வேண்டுகோள்

ADDED : ஜூன் 21, 2025 12:54 AM


Google News
கிருஷ்ணகிரி, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, 136 ஆண்டுகள் பழமை வாய்ந்த நெடுங்கல் தடுப்பணை பகுதியை, சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், நெடுங்கல் அருகே ஆங்கிலேயர் காலத்தில், 1887-1888ல், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை, 912 அடி நீளம் கொண்டதாகவும், 8.97 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கும் அளவிலும், முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. தடுப்பணையின் இரண்டு பக்கத்திலும் பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் வகையில், கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

கம்பீரமாக காட்சி தரும் அணை

தடுப்பணையின் கிழக்குபுற கால்வாய் வழியாக, 7 ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தடுப்பணையை சுற்றிலும் இயற்கை எழில் சூழ்ந்த மரங்கள் உள்ளதால், ஆங்கிலேயர்கள் ஓய்வு மாளிகை கட்டி தங்கி வந்துள்ளனர். 136 ஆண்டுகளை கடந்தும் அணை தற்போதும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

காவேரிப்பட்டணத்தில் இருந்து, 7 கி.மீ., தொலைவில் உள்ள தடுப்பணையை சுற்றுலா தலமாக மாற்றினால், இம்மாவட்ட மக்கள் மட்டுமின்றி, வெளி மாநில சுற்றுலா பயணிகளும் வந்து செல்வர். இதன்மூலம் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு நிலையான வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

இது குறித்து, காவேரிப்பட்டணத்தை சேர்ந்த முன்னாள் காங்., மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:

காமராஜர் காலத்தில் நெடுங்கல் தடுப்பணையை புனரமைத்தனர். கிருஷ்ணகிரியில் இருந்து, 17 கி.மீ., தொலைவில் உள்ள தடுப்பணை பகுதியில், 60 ஏக்கர் பரப்பளவில் அழகிய பூங்கா உள்ளது.

இங்கு சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும், புல்வெளிப்பகுதியில் நீரூற்றும், மான் பண்ணையும் உள்ளது. நெடுங்கல் தடுப்பணை அருகே உள்ள பெண்ணேஸ்வர மடத்தில், தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும், 1,000 ஆண்டுகள் பழமையான பெண்ணேஸ்வரர் கோவிலும் உள்ளது. இதனால் இப்பகுதியை சுற்றுலா தலமாக மாற்றினால் ஏராளமான மக்கள்

பயன்பெறுவர்.

இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us