Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

UPDATED : ஜன 10, 2024 12:30 PMADDED : ஜன 10, 2024 12:01 PM


Google News
அரசு நடுநிலை பள்ளியில்

மரக்கன்றுகள் நடும் விழா

கம்பைநல்லுார் அடுத்த, குண்டலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' திட்டத்தில், மரக்கன்றுகள் நடும் விழா

நடந்தது.

இயற்கையை காப்போம் என்ற அமைப்பின் உதவியுடன் நடந்த விழாவிற்கு, மொரப்பூர் வட்டார கல்வி அலுவலர் கணேசன் தலைமை வகித்தார். விழாவில், இயற்கை காப்போம் அமைப்பின் உறுப்பினர் பிரேம்குமார், தலைமையாசிரியை ரெஜினாமேரி, ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆர் .ஐ., அலுவலகத்தில்

ஆர்.டி.ஓ., ஆய்வு கூட்டம்

பாப்பிரெட்டிபட்டி, ஆர்.ஐ., அலுவலகத்தில் பாப்பிரெட்டிபட்டி, தென்கரைகோட்டை வருவாய் உள் வட்டங்களை சேர்ந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், அரூரில் முதல்வர் மக்கள் குறை தீர் முகாமில் கொடுத்த மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து, வருவாய் துறை அலுவலர்களிடம், ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் ஆய்வு மேற்கொண்டார்.

தாசில்தார் வள்ளி, துணை தாசில்தார் கம்ருதீன், ஆர்.ஐ.,க்கள் சிவக்குமார், ரஷியாபஷிர் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள், சர்வேயர்கள் பங்கேற்றனர்.

4 கிலோ புகையிலை

பொருட்கள் பறிமுதல்

அரூர் போலீஸ் டி.எஸ்.பி., நாகராஜன் உத்தரவின்படி, தனிப்பிரிவு எஸ்.ஐ., சக்திவேல் உள்ளிட்ட போலீசார் மெணசி பகுதியில், புகையிலை தடுப்பு சம்பந்தமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கடையில் ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த, அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 40, என்பவரை பிடித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து, 4 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

போதை பொருள் தடுப்பு

விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி மாவட்டம், அரூரில், போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற நிலையினை ஏற்படுத்தும் வகையில், அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர்

பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

கல்லுாரி வளாகத்தில் துவங்கிய பேரணி பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது.

கல்லுாரி மாணவ, மாணவியர் போதை ஒழிப்பு, போதை பழக்கத்திலிருந்து விடுபடுவது குறித்து விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி

சென்றனர்.

இருளர் மக்களின் மயானம் ஆக்கிரமிப்பு

வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஜெகதேவியில், 100க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்கள் கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் காமாட்சிபுரம் மற்றும் காந்திநகர் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்.

அவர்களது மயானம் ஜெகதேவி அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் அருகே உள்ளது. அந்த இடத்தை சிலர் அபகரிக்க முயல்வதாகவும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி, அப்பகுதி இருளர் இன மக்கள் நேற்று ஜெகதேவி வி.ஏ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பர்கூர் தாசில்தார் மகேஸ்வரி மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'இருளர் இன மக்கள் மயானப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இறந்தவரை அவ்வழியில் எடுத்து செல்லக்கூடாது என சிலர் மிரட்டுகின்றனர்' எனக்கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து

சென்றனர்.

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

அரூர் இன்ஸ்பெக்டராக இருந்த பாஸ்கர்பாபு, சேலம் மாவட்டம், வாழப்பாடி ஸ்டேஷனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக அங்கு பணியாற்றி வந்த உமாசங்கர் அரூர் இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இன்ஸ்பெக்டர் உமாசங்கருக்கு, ஸ்டேஷன் எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

போக்குவரத்து பணியில் 80 சதவீத பணியாளர்கள்

போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சிக்கும், தி.மு.க.. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும், அண்ணா தொழிற் சங்கத்தினர், சி.ஐ.டி.யு., - பா.ம.க., - ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற் சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் பாரதிபுரம் பணிமனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்நிலையில், இதுகுறித்து தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் செல்வம் கூறுகையில்,'' தர்மபுரி மண்டலத்தில், 80 சதவீத போக்குவரத்து கழக பணியாளர்கள் நேற்று பணிக்கு வந்தனர். மாவட்டத்தில் உள்ள ஆறு டிப்போக்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும், 351 அரசு பஸ்களும் நேற்று இயக்கப்பட்டது,''

என்றார்.

கத்தியை காட்டி வழிப்பறி

செய்த சிறுவன் கைது

பர்கூர் அடுத்த காணிக்காரன்கொட்டாயை சேர்ந்தவர் மூர்த்தி, 20. இவர், கிருஷ்ணகிரியில் உள்ள டிராக்டர் நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். கடந்த, 8ல், பணி முடிந்து டி.வி.எஸ்., மொபட்டில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் அருகில் சென்ற போது அங்கு வந்த மூவர், மூர்த்தியை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, 500 ரூபாயை பறித்து சென்றனர். மூர்த்தி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். விசாரணையில், பணப்பறிப்பில் ஈடுபட்டது, 17 வயது சிறுவன் உள்பட மூவர் என தெரிந்தது. சிறுவனை கைது செய்த போலீசார், கிருஷ்ணகிரி பாரதியார் நகரை சேர்ந்த அஜித், 23, ஸ்டாலின், 24 ஆகியோரை தேடி வருகின்றனர்.

டிப்ளமோ மாணவி மாயம்

வாலிபர் மீது புகார்

ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த, 17 வயது இரண்டாமாண்டு டிப்ளமோ படித்து வரும் மாணவி, கடந்த, 30ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மாணவியின் பெற்றோர், நேற்று முன்தினம் ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்தனர். அதில் தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மாம்பட்டியை சேர்ந்த சுகவனம் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

டிரைவரை தாக்கிய இருவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, உத்தனப்பள்ளி அருகே அகரம் முருகன் கோவில் இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயராமன், 28; டிரைவர்.

கடந்த, 6 மாதங்களுக்கு முன், அப்பகுதியை சேர்ந்த கார்த்திக், 25, என்பவரது சகோதரியை, ஜெயராமன் காதலித்து திருமணம் செய்தார். இந்த முன்விரோதம் காரணமாக, ஜெயராமன் வீட்டிற்கு நேற்று முன்தினம் காலை சென்ற கார்த்திக் மற்றும் அவரது தரப்பினர், ஜெயராமனிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த கார்த்திக் தரப்பினர், ஜெயராமன் மற்றும் அவரது அக்கா முருகம்மா, 31, ஆகிய இருவரையும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

காயமடைந்த இருவரும், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஜெயராமன் கொடுத்த புகார்படி, அஜித், 26, மாதையன், 55, ஆகிய இருவரை, உத்தனப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள கார்த்திக், பூவரசன், 26, ஆகிய இருவரை தேடுகின்றனர்.

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் ரவி, 50; கூலித்தொழிலாளி. கடந்த, 7 மாலை, 4:00 மணிக்கு தன் வீட்டின் முதல் தளத்தில் உள்ள மின்கம்பியை எதிர்பாராதவிதமாக

தொட்டுள்ளார்.

இதில் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us