ADDED : ஜூன் 25, 2024 02:19 AM
வாலிபர் உட்பட இருவர் மாயம்
ஓசூர்: ஓசூர், அன்னை நகர் எஸ்.எம்., நகரை சேர்ந்தவர் மதன்ராஜ், 29. தனியார் மெடிக்கலில் பணியாற்றி வருகிறார்; கடந்த, 20 காலை, 10:30 மணிக்கு வீட்டிலிருந்து பணிக்கு சென்றவர் மாயமானார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
பேரிகை அருகே முகலப்பள்ளியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 40, டிராக்டர் டிரைவர்; கடந்த, 21 மாலை, 5:00 மணிக்கு, வீட்டிலிருந்து தன் பைக்கில் சென்றவர் திரும்பவில்லை. அவரது பைக், முகலப்பள்ளி கேட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. அவரது மனைவி வினோதா, 30, புகார் படி, பேரிகை போலீசார் சுப்பிரமணியை தேடி வருகின்றனர்.
கயிற்றில் சிக்கி பெண் பலிஓசூர்: சூளகிரி அருகே எர்ரண்டப்பள்ளியை சேர்ந்தவர் மல்லப்பா மனைவி பார்வதி, 65; கடந்த, 17 மதியம், 3:30 மணிக்கு, தன் நிலத்தில் பசு மாட்டை மேய்த்து கொண்டிருந்தார். திடீரென மாடு எதையோ பார்த்து மிரண்டு ஓடிய நிலையில், அதை பார்வதி பிடிக்க முயன்றார். அப்போது மாட்டின் கயிற்றில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட பார்வதி, அங்கிருந்த தென்னை மரத்தில் மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஏரியில் ஆண் சடலம் மீட்பு
போச்சம்பள்ளி, ஜூன் 25-
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார், மூக்காகவுண்டனுாரை சேர்ந்தவர் அறிவழகன், 37; இவர் மூட்டை துாக்கும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த, 4 நாட்களாக காணாவில்லை. நேற்று காலை மத்துார் டாஸ்மாக் கடை எதிரிலுள்ள ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதாக மத்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை மீட்ட போலீசார் விசாரணையில் இறந்து கிடந்தது அறிவழகன் என தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
போதை ஒழிப்பு விழிப்புணர்வுபோச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையில், நேற்று போதை ஒழிப்பு விழிப்புணர்வை பேரணி நடந்தது. இதில், பாரூர் அரசு உயர் நிலைப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பாரூர் போலீசார், போதை பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பி பேரணியாக சென்றனர்.
இந்து முன்னணி பொதுக்கூட்டம்ஓசூர்-
ஓசூர் ராம்நகரில் இந்து முன்னணி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாநகர தலைவர் சசிக்குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் குற்றாலநாதன், சேலம் கோட்ட செயலாளர் உமேஷ், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் கலை கோபி ஆகியோர் பேசினர். மாவட்ட பொதுச்செயலாளர் பாபு, மாவட்ட செயலாளர்கள் கேசவகுமார், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
சாராயம் கடத்திய 4 பேர் கைதுகிருஷ்ணகிரி: பர்கூர் போலீசார், நேற்று முன்தினம் வரமலைகுண்டா சோதனைச்சாவடி அருகே ரோந்து சென்றனர். அவ்வழியே சென்ற இருவரை நிறுத்தி சோதனையிட்டதில், அவர்களிடம் தலா, 3 லிட்டர் சாராயம் இருந்தது தெரிந்தது. விசாரணையில், ஆந்திராவிலிருந்து சாராயத்தை கடத்தி வந்து கிருஷ்ணகிரியில் விற்க முயன்றதும், ஆந்திர மாநிலம், குப்பம் அடுத்த மல்லானுாரை சேர்ந்த கனகராஜ், 39, மோட்டுசேனு கிராமத்தை சேர்ந்த கனகப்பன், 58 என்பதும் தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது
செய்தனர்.
அதேபோல, கந்திகுப்பம் போலீசார் குருவிநாயனபள்ளி அருகே ரோந்து சென்றனர். அப்பகுதியில், ஆந்திர மாநிலத்திலிருந்து சாராயம் வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்ட மேடுகம்பள்ளி வெங்கடேசன், 55, கச்சாலிக்கானுார் கோவிந்தராஜ், 48 ஆகிய இருவரை கைது
செய்தனர்.