Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கிருஷ்ணகிரி சிலவரி செய்திகள்

கிருஷ்ணகிரி சிலவரி செய்திகள்

கிருஷ்ணகிரி சிலவரி செய்திகள்

கிருஷ்ணகிரி சிலவரி செய்திகள்

ADDED : ஜூன் 08, 2024 03:06 AM


Google News
வாகனத்தில் அடிபட்ட

புள்ளிமான் இறப்பு

தொப்பூர்: தொப்பூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற, புள்ளிமான் வாகனத்தில் அடிபட்டு இறந்தது.

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த வெள்ளக்கல் பகுதியில் நேற்று காலை, 8:30 மணிக்கு சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், தொப்பூர் வனத்தில் இருந்து, 3 வயதுடைய ஆண் புள்ளிமான் சாலையை கடந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்தது.

பாளையம் சுங்கசாவடி சாலை பராமரிப்பு குழுவினர் அடிபட்ட புள்ளிமானை மீட்டு, பாளையம்புதூர் அரசு கால்நடை மருந்தகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் ஞானசேகர் மானுக்கு சிகிச்சை அளித்த பின், வனப்பகுதியில் விடுவதற்காக, வனத்துறையினர் கொண்டு செல்லும் வழியில் மான் இறந்தது.

மக்களை தேடி மருத்துவ முகாம்

13 லட்சம் பேர் பயன்: கலெக்டர்

தர்மபுரி: 'தர்மபுரி மாவட்டத்தில் நடந்து வரும் மக்களை தேடி மருத்துவ முகாமில், 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்' என, கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தர்மபுரியில், மக்களை தேடி மருத்துவ முகாம் கடந்த, 2021ல் துவங்கப்பட்டது. இதுவரை, 12 லட்சத்து, 70 ஆயிரத்து, 149 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஐந்து வகையான நோய்கள் கண்டறியப்பட்டு, மூன்று லட்சத்து, 5,270 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சிட்லிங், கம்பாலை மலைப்பகுதியை சேர்ந்த மலை கிராம மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு அதிக அளவில் சிகிச்சை பெற்றனர். இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட பால்சிலம்பு, சின்னாங்காடு, பெரியூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், இந்த மக்களை தேடி மருத்துவம் மூலம் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

அடையாள அட்டை கோரி

மாற்றுத்திறனாளிகள் மனு

அரூர்: அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சஞ்சீவனிடம், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில், கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதில், நிர்வாகிகள் தமிழ்செல்வி, காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி எம்.பி.,க்கு

கட்சியினர் வரவேற்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், தி.மு.க., தலைமையிலான இண்டியா கூட்டணியில், காங்., கட்சி சார்பில் போட்டியிட்ட கோபிநாத், 1 லட்சத்து, 92 ஆயிரத்து, 486 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சென்னை சென்ற அவர், முதல்வர் ஸ்டாலினை நேற்று முன்தினம் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன் பின் நேற்று மாலை சொந்த ஊரான ஓசூர் திரும்பினார்.

வரும் வழியில் கிருஷ்ணகிரி, சூளகிரி, ஓசூர் சீத்தாராம்மேடு, ராயக்கோட்டை சாலை சந்திப்பு உட்பட பல்வேறு இடங்களில் மேள, தாளங்கள் முழங்க காங்., மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். டி.வி.எஸ்., தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, காங்., மாநில செயற்குழு உறுப்பினர் நீலகண்டன், மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன், மாநகர தலைவர் தியாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, கோபிநாத் எம்.பி., நிருபர்களிடம் கூறுகையில்,'' ஓசூரை சேர்ந்தவர் கிருஷ்ணகிரி எம்.பி.,யாக இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. அந்த வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. மாவட்டம் முழுவதும், மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்து செய்து கொடுப்பேன். இண்டியா கூட்டணி வெற்றிக்கு பாடுபட்ட காங்., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி,'' என்றார்.

போர்வெல் லாரி ஏறியதில்

ஆப்பரேட்டர் பலி

கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், டி.துரிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் முருகன், 40; போர்வெல் லாரி ஆப்பரேட்டர். இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி, இந்திரா நகர் பகுதியில் போர் அமைக்கும் பணிக்காக வந்துள்ளார். போர்வெல் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

போர்வெல் லாரிக்கு பின்னால் முருகன் நின்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக லாரி பின்னோக்கி வந்துள்ளது. இதை கவனிக்காத முருகன் மீது, லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார்

விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us