Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாற்றுத்திறனாளி வாலிபருக்கு தொல்லை தி.மு.க., - எம்.எல்.ஏ., உதவியாளர் கைது

மாற்றுத்திறனாளி வாலிபருக்கு தொல்லை தி.மு.க., - எம்.எல்.ஏ., உதவியாளர் கைது

மாற்றுத்திறனாளி வாலிபருக்கு தொல்லை தி.மு.க., - எம்.எல்.ஏ., உதவியாளர் கைது

மாற்றுத்திறனாளி வாலிபருக்கு தொல்லை தி.மு.க., - எம்.எல்.ஏ., உதவியாளர் கைது

ADDED : செப் 10, 2025 03:39 AM


Google News
Latest Tamil News
கிருஷ்ணகிரி:மாற்றுத்திறனாளி வாலிபருக்கு பாலியல் தொல்லை கொடுத்த, பர்கூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., உதவியாளர் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கால்வேஹள்ளியை சேர்ந்தவர் காளி, 20; பி.ஏ., பட்டதாரியான இவர், கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. கிருஷ்ணகிரி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், நகராட்சி நுாலகத்தில் அரசு தேர்வுக்கு தயாராக படித்து வந்தார். ஆக., 27ல் பஸ் ஸ்டாண்டிற்கு சென்றவர், அங்குள்ள பெண்களிடம் பேசியதை, பேன்சி கடை நடத்தும் ஹசன் அலி, 33, என்பவர் வீடியோ எடுத்தார். காளியிடம் வீடியோவை காட்டி, நான் கூப்பிடும் இடத்துக்கு வர வேண்டும் என, மிரட்டியுள்ளார்.

மறுநாள் அவரை, கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில், தர்கா அருகே மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். தொடர்ந்து, பர்கூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் உதவியாளர் அதியமான், 39, என்பவரை, போன் செய்து வரவழைத்தார்.

அவரும் பாலியல் தொல்லை கொடுத்தார். காளி, கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார்.

கிருஷ்ணகிரி தி.மு.க., மேற்கு நகர பொறுப்பாளர் அஸ்லம், இருதரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து சமரசம் பேசியுள்ளார்.

அதில், பாதிக்கப்பட்ட காளிக்கு, 10,000 ரூபாய் வழங்கியுள்ளனர். இந்நிலையில், காளி செப்., 2ல், எஸ்.பி., அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார், ஹசன் அலி, அதியமானை, நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர்.

அஸ்லம் மற்றும் அவருடன் இருந்த சுகுமார், கிரி ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி, கிருஷ்ணகிரி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார், நுாற்றுக்கும் மேற்பட்டோருடன் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் ஸ்டேஷனை நேற்று முற்றுகையிட்டார். கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., முரளி பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இந்நிலையில், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, எம்.எல்.ஏ., மதியழகன் தன் உதவியாளர் பணியில் இருந்து அதியமானை நேற்று நீக்கினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us