/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ விபத்தில் சிக்கிய மூதாட்டிக்கு வெளியே படுக்க வைத்து சிகிச்சை விபத்தில் சிக்கிய மூதாட்டிக்கு வெளியே படுக்க வைத்து சிகிச்சை
விபத்தில் சிக்கிய மூதாட்டிக்கு வெளியே படுக்க வைத்து சிகிச்சை
விபத்தில் சிக்கிய மூதாட்டிக்கு வெளியே படுக்க வைத்து சிகிச்சை
விபத்தில் சிக்கிய மூதாட்டிக்கு வெளியே படுக்க வைத்து சிகிச்சை
ADDED : ஜூன் 24, 2024 07:28 AM
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, பாம்பட்டியை சேர்ந்தவர் முருகம்மாள், 70; இவர், பெரியதளிப் பட்டியிலுள்ள தன் மகள் வீட்டிற்கு, மகனுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது சந்துார் அருகே பைக்கிலிருந்து முருகம்மாள் தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை சந்துாரிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பணியிலிருந்த செவிலியர் காயமடைந்த முருகம்மாளை வெளியே நோயாளிகள் அமர போடப்பட்டுள்ள கல் சிலாப் மீது படுக்க வைத்து சிகிச்சை அளித்துள்ளார். இது முருகம்மாளின் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணியிலிருந்த செவிலியரிடம் கேட்டதற்கு, ஸ்ட்ரெச்சர் உடைந்து விட்டதால் வேறு வழியின்றி அவசரத்தில் சிகிச்சை அளித்ததாக கூறினார்.வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமாரிடம் கேட்டபோது, 'இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்கவும், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும்' தெரிவித்தார்.
மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிஓசூர்: ஓசூர், மக்கள் சங்கம் சார்பில், ஐக்கிய நாடுகளின் பொதுச்சேவை நாளையொட்டி, ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்கரை சிறுவர் பூங்கா வளாகத்திலுள்ள தியான மண்டபத்தில், நேற்று காலை அரசு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஓசூர் மக்கள் சங்க முன்னாள் தலைவர் சரவணன், தலைவர் பிரசாத் தலைமை வகித்தனர். டாக்டர் சண்முகவேல், அரிமா சங்க தலைவர் ரெட்டி, ஆடிட்டர்கள் மணி, சீனிவாசன், ஓசூர் மனவளக்கலை மன்ற தலைவி கலாராணி, தனியார் நிறுவன மனிதவள பிரிவு அதிகாரி பாபு ஆகியோர், சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பின் அவசியம், பிளாஸ்டிக் ஒழிப்பு, சேவை பணிகள் பற்றி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, ராமநாயக்கன் ஏரிக்கரையிலுள்ள நடைபாதையோரம், இயற்கையை காக்க மரக்கன்றுகள் நடப்பட்டன. அரசு பெண்கள் பள்ளி மாணவியர், அங்கிருந்த புற்களை வெட்டி சுத்தம் செய்தனர். ஏற்பாடுகளை, தன்னார்வலர்கள் மோனி, நரசிம்மலு உட்பட பலர் செய்திருந்தனர்.
மது கொடுக்க மறுத்த டாஸ்மாக் ஊழியருக்கு அடிஓசூர்: சாமல்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார், 50. ஓசூர் அரசனட்டி அமிர்தா நகரில் தங்கி, மகாலட்சுமி நகர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றுகிறார்; நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, மர்ம நபர் ஒருவர் வந்து, பணம் கொடுக்காமல் பீர் கேட்டார். சிவக்குமார் மறுக்கவே ஆத்திரமடைந்த மர்ம நபர், பீர்பாட்டிலால் சிவக்குமாரை தாக்கினார். ஓசூர் டவுன் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்புகிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே மிட்டஹள்ளிபுதுாரில், தனியாருக்கு சொந்தமான இடத்தில், அரசால் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்க்கப்படுவதாக மீன்வளத்துறைக்கு நேற்று தகவல் கிடைத்தது. மீன்களை லாரியில் ஏற்றி விற்பனைக்கு கொண்டு செல்வதை அறிந்த மீன்வளத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணியன், உதவி இயக்குனர் ரத்தினம், சார் ஆய்வாளர் கோகிலா மணி ஆகியோர், அப்பகுதியில் லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் மொத்தம் ஒரு டன் அளவில் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலுள்ள அலுவலகம் அருகே குழி தோண்டி பிளீச்சிங் பவுடர் போட்டு புதைத்தனர். ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்த்து வந்த நபரை போலீசார் எச்சரித்தனர்.
குப்பை சேகரிக்க புதிய டப்பாக்கள்கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல், உள்ள, 15 வார்டுகளில், வீடு, வீடாக சென்று துாய்மை பணியாளர்கள் குப்பை சேகரிக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் டப்பாக்கள் மோசமான நிலையில் இருந்தன. அதனால், வீடுகளில் சேரும் குப்பையை சரியாக வாங்க முடியாத நிலை உருவானது. இதையடுத்து, ஒவ்வொரு வார்டுக்கும் தலா, 4 பிளாஸ்டிக் டப்பாக்கள் வீதம் மொத்தம், 60 குப்பை அள்ளும் டப்பாக்கள் மற்றும் குப்பைகளை அள்ளி செல்லும் வாகனங்களுக்கு புதிய டயர்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றை, டவுன் பஞ்., தலைவி அம்சவேணி செந்தில்குமார், துாய்மை பணியாளர்களிடம் வழங்கினார். செயல் அலுவலர் கீதா, அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணைத்தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.