ADDED : ஜூன் 16, 2024 01:08 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி உள்ளிட்ட, 8 வட்டங்களில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது.
ஊத்தங்கரை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து, சிங்காரப்பேட்டை உள்வட்டத்திற்கு உட்பட்ட, 34 கிராம மக்களிடையே மனுக்களை பெற்றார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெறப்பட்ட, 215 மனுக்களில் தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா, தாசில்தார் திருமால், பி.டி.ஓ., பாலாஜி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பர்கூர் தாலுகா அலுவலகத்தில், உதவி ஆணையர் குமரன் மனுக்களை வாங்கினார். கிருஷ்ணகிரியில் ஆர்.டி.ஓ., பாபு ஜமாபந்தியை துவக்கி வைத்து மனுக்களை பெற்றார். போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்தில், ஜமாபந்தி அலுவலரான தனித்துணை ஆட்சியர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. போச்சம்பள்ளி தாசில்தார் மகேந்திரன், சமூக பாதுகாப்பு தாசில்தார் கங்கை மற்றும் துணை தாசில்தார்கள் பாரதி, ரஹமத்துல்லா மற்றும் பலர் பங்கேற்றனர்.