/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அகில இந்திய மாங்கனி கண்காட்சி: பொதுமக்கள் எதிர்பார்ப்பு அகில இந்திய மாங்கனி கண்காட்சி: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
அகில இந்திய மாங்கனி கண்காட்சி: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
அகில இந்திய மாங்கனி கண்காட்சி: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
அகில இந்திய மாங்கனி கண்காட்சி: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 16, 2024 01:07 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், இந்த ஆண்டு மாங்கனி கண்காட்சி எங்கு நடக்கிறது என, பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 44 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டு, தமிழகத்திலேயே முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், 2.50 லட்சம் மெட்ரிக் டன் மாங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் மாங்காய்களில், 70 சதவீதம் மாங்கூழ் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு, 600 கோடி ரூபாய் அந்நிய செலவாணி கிடைக்கிறது.
கடந்த, 1992 முதல் கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாங்கனி கண்காட்சி நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாங்கனி கண்காட்சியை பார்த்து செல்கின்றனர்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் பள்ளி மைதானத்தில் நடக்கும் மாங்கனி கண்காட்சிக்கு செல்ல, இரண்டு சிறிய வழிகள் மட்டுமே உள்ளதால், கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் இந்தாண்டு மாங்கனி கண்காட்சியை இங்கு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாங்கனி கண்காட்சி முடிந்த பிறகு, கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி சிறுவர் பூங்கா பின்புறம் உள்ள காலியிடத்தில், 30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை நடத்த இடம் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அவதானப்பட்டி உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால், இந்தாண்டு மாங்கனி கண்காட்சியை எங்கு நடத்துவது என மாவட்ட நிர்வாகம் முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருகில் உள்ள காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் மைதானம் அல்லது டோல்கேட் அருகில் உள்ள தேவராஜ் மைதானம் என இரண்டு இடங்களில் ஒன்றில் கண்காட்சியை நடத்தினால் பொதுமக்கள் வந்து செல்ல சிரமம் இருக்காது என்ற கருத்தும் நிலவுகிறது.