ADDED : ஜூன் 25, 2024 02:16 AM
ஓசூர்: ஓசூர் பஸ் டிப்போ முன், சி.ஐ.டி.யு., போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் மற்றும் போக்குவரத்து பணிஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சங்கம் சார்பில், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை, 10:00 மணி முதல், 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நேற்று துவங்கியது.
துணை பொதுச்செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். நகர கிளை தலைவர் அருண் வரவேற்றார். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் வாசுதேவன், உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். மாநில செயலாளர் நாகராஜ், தர்மபுரி மண்டல பொதுச்செயலாளர் சண்முகம், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஸ்ரீதரன் ஆகியோர், போக்குவரத்து துறையில் வரவு, செலவுக்கு இடையே உள்ள வித்தியாச தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களின், 104 மாத டி.ஆர்., உயர்வை, நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும் என்பன உட்பட, 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.